தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மரக்கிளைகளை வெட்டாமல், 40 மரங்களை வேரோடு பிடுங்கப்பட்டதால், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக வீதியோரம் மா, தேக்கு, வேம்பு, புங்கன், செம்மரம், உதயன், யூகலிப்டஸ் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் ஏராளமான பறவையினங்கள், அணில்கள் கூடுகட்டி வசித்து வந்தன.
இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பிள்ளையார்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் மரக்கிளைகளை வெட்டுவதற்கு பதில், வேம்பு, செம்மரம், தேக்கு, புங்கன் உள்ளிட்ட 40 மரங்களை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வேரோடு பிடுங்கினர். இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மரங்களை கடந்த 15 லிருந்து 30 ஆண்டு காலமாக மரங்களை தங்களது வீடுகளில் ஒருவராக நினைத்து வளர்த்து வந்த நிலையில், புதன்கிழமை அன்று இந்த மரங்கள் திடீரென பிடுங்கி, வீசப்பட்டதால் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மழை வளம் குறைந்து கொண்டே வருவதால், அரசு சார்பில் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக பல கோடி நிதி ஒதுக்கீடு செய்து மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் வளர்ந்த மரங்களை புயல் காரணமாக காட்டி அதனைஅடியோடு பிடுங்கி உள்ள செயல் வேதனையாகும். மரங்களால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த மரக்கிளைகளை மட்டுமே வெட்டியிருக்கலாம். ஆனால் வேரோடு பிடுங்கியுள்ளனர். இந்த மரங்களால் சிலருக்கு ஆதாயம் ஏற்படக்கூடும் என்பதால் பிடுங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தான் விசாரணை நடத்திட வேண்டும்” என்றனர்.