tamilnadu

img

பள்ளிகளை சுழற்சி முறையில் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திடுக.... மாணவர் சங்கம் வேண்டுகோள்

சேலம்:
மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படா வண்ணம் பள்ளிகளை சுழற்சி முறையில் துவங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சேலத்தில் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், மாநில துணைத் தலைவர்கள் எம்.கண்ணன், ஜி.நிருபன் சக்கரவர்த்தி, மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மத்திய குழு உறுப்பினர்கள்  ஜான்சி, சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:

தனியார் மருத்துவ கல்லூரி களில் இடம் கிடைத்த அரசுப் பள்ளிமாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்என்ற அறிவிப்பு கால தாமதமாக வந்துள்ளது. இதனால், ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தகுதி இருந்தும் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் இலவசமாக உயர் கல்வி பயில வழிவகுக்கும் அரசாணை எண்92, 55, 56 என்று மாற்றி அறிவிக்கப் பட்டு, அந்த அரசாணைக்காண கல்வி உதவிதொகை இன்னும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மேற்கண்ட மாணவர்களை கட்டணம்கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்து சான்றிதழ் தர மறுத்து வருகின்றன. எனவே,மத்திய மாநில அரசுகள் உடனடியாக மேற்கண்ட நிதியினை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை தமிழக அரசு அறிவித்த பின்னரும் தனியார் கல்லூரி போன்று கட்டணம் வசூலித்து வருவதால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக மேற்கண்ட மருத்துவ கல்லூரி கட்டணத்தை மற்ற அரசுக் கல்லூரிகளை போல மாற்றி அமைத்து அரசாணை வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவைவை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசுப் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளடக்கிய ஆய்வு குழு அமைத்து மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படா வண்ணம் பள்ளிகளை சுழற்சி முறையில் துவங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டம் 50 சதமாக குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்னும் முழுமையான அறிவிப்பு வெளியாகததால் மாணவர்கள் மிகப் பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது காவல்துறையைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் மோடி அரசாங்கத்தைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;