tamilnadu

img

அஸாஹி கண்ணாடி தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் ஏப்.22 பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு

சென்னை, ஏப். 16 -காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் அஸாஹி இந்தியா கிளாஸ் லிட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஹூண்டாய், டொயோட்டா, ஃபோர்டு, உள்ளிட்ட கார் மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு கண்ணாடிகளை உற்பத்தி செய்து தருகிறது. இந்த நிறுவனத்தில் 240 நிரந்தர தொழிலாளர்களும், சுமார்800 கான்ட்ராக்ட் மற்றும் பயிற்சிதொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.தொழிற்சங்கம் அமைத்தற்காக 28 நிரந்தர தொழிலாளர்ளை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. மேலும், பணியிடை நீக்கம், காரணம்கோரும் அறிவிப்பு, உள்விசாரணை என நிரந்தர தொழிலாளர்களை கடும்மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. வாயிற் கூட்டம் நடத்தியற்கு கூட தண்டனை வழங்கப்படுகிறது.எனவே, தொழிற்சங்க தவா நிலுவையில் இருந்தாலும், கடந்தமார்ச் 25ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர்.


இருங்காட்டுக்கோட்டையில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரமில்லாத அதிகாரிகளே பங்கேற்கின்றனர். இதனால் 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் 23வது நாளை எட்டியது.இந்நிலையில் சிஐடியு தலைவர் இ.முத்துக்குமார் தலைமையில் தொழிலாளர்கள், செவ்வாயன்று (ஏப்.16) சென்னையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆணையர் முனைவர் நந்தகுமாரிடம் அளித்தனர்.இதனையடுத்து ஆணையர், கூடுதல் ஆணையர் யாசின்பேகம், இணை ஆணையர் பொன்னுசாமி உள்ளிட்டோரை அழைத்து ஆலோசித்தார். அதன்பின்னர், ஏப். 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

;