திருப்பூர்:
திருப்பூரில் பனியன் நிறு வனங்களிடம் துணிகளை வாங்கி, கூலி அடிப்படையில் உள்ளாடைகள் தைத்துத் தரும் 2000 தையல் நிலையங்கள் (பவர்டேபிள்) கூலிஉயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான உள்ளாடைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை தவிர, உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான உள்ளாடைகள், பின்னலாடைகளை தயாரிக்கும் முன்னணி பனியன்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி நடைபெறுகிறது. பல பெரிய நிறுவனங்கள் பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடை துணிகளை மொத்தமாக வெட்டி, வெளியே தையல் நிலையங்களில் கொடுத்து கூலிக்கு தைத்து வாங்குகின்றனர்.
திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி,கோபி, சேயூர், குன்னத்தூர், புளியம்பட்டி, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, தேனி என மாநிலத்தின் பலபகுதிகளிலும் இந்த பவர்டேபிள் தையல் நிலையங்கள் செயல்படுகின்றன. வாரம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் திருப்பூரில் இருந்து துணிகளை வாகனங்களில் வாங்கி வந்து தைத்து அனுப்பும் பணியாக இது விரிவடைந்துள்ளது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைபவர்டேபிள் சங்கத்தின் மூலம் தையல் கூலி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது. முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்து 9 மாதங்கள் ஆகியும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.
எனினும் நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய கூலி உயர்வு வழங்கவேண்டும் என பவர்டேபிள் சங்கத்தினர்தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனினும் சைமா சங்கத்தினர் காலதாமதம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி பவர்டேபிள் சங்க செயற்குழுக் கூட்டம்சங்கத் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 9 மாத காலமாக நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் தொழில் நடத்துவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. சிறிய நிறுவனங்கள் கூலி உயர்வு கொடுத்துள்ளார்கள். பெரிய நிறுவனங்கள் சைமாவின் ஒப்பந்த அடிப்படையிலேயே கூலி உயர்வு அளிக்க முடியும் என்று கூறுகிறார்கள். எனவே கூலி உயர்வு கொடுக்காத பெரிய நிறுவனங்களில் வரும் 28ஆம்தேதி புதன்கிழமை முதல் உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்வது என்று செயற்குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் புதன்கிழமை திருப்பூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 2 ஆயிரம் பவர்டேபிள் தையல் நிலையங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.
இதில் பவர்டேபிள் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன், அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரும் பங்கேற்றுள்ளனர். இதனால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான உள்ளாடை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பவர்டேபிள் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கையைப் புரிந்துகொண்டு தற்போதுள்ள நிலையில் குறைந்தது 20 சதவிகிதம் கூலி உயர்வை இடைக் காலமாக வழங்க பனியன் நிறுவனங்கள்முன்வர வேண்டும் என்று பவர்டேபிள் சங்கச் செயலாளர் ஆர்.நந்தகோபால் கூறினார். (ந.நி.)