பெருமைக்குரிய இந்திய சுதந்திரம் என்பது பல்வேறு இனம், மொழி பேசும் மக்களால் போராடி பெறப்பட்ட பொக்கிஷம். மகாகவி பாரதியார் பாண்டிச்சேரியில் வனவாசம் செய்த காலம். திலகர் ஆறாண்டு சிறைத் தண்டனை பெற்று பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்ட காலம்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்ட காலம். பாரதி பார்வையில் பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கோலோச்சிய காலம். வறுமை எனும் படுகுழியில் வீழ்ந்து கிடந்தவர் பாரதி யார். ஆனால் விடுதலைப் போரில் காந்தியடிகள் தலைமையேற்கும் முன்பே இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டுமென்று முரசு கொட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பியவர்.
அவர் விடுதலை விரும்பியது இந்திய மண்ணிற்கு மட்டுமல்ல; மக்களுக்கும் தான். சாதிக் கொடுமையி லிருந்து விடுதலை, சமயப் பகைமையிலிருந்து விடு தலை, பொருளாதாரச் சுரண்டலிலிருந்து விடுதலை, பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுதலை என எங்கும் எதிலும் மக்களுக்கு விடு தலை என்று உரத்துப் பாடினார். ‘சிந்து நதியின் இசை நில வினிலே’, நல்லதோர் வீணை செய்தே, உன் கண்ணில் நீர் வழிந்தால் என பல்சுவை விருந்து படைத்த பாரதி இலக்கி யப் புலவர் மட்டுமல்ல. விடு தலை வேட்கையுடைய தலை சிறந்த தேசபக்தர்; விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறை புகுந்த தியாகச் செம்மல் என சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் பெருமையுடன் புகழாரம் சூட்டுகிறார்.
“ பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்று நமது தேசம், நமது மக்கள், இவை தான் உயிருள்ள தெய்வங்கள் என்று பாரதி பறைசாற்றுகிறார். “பாரதியின் எழுச்சிமிகு கீதம் தமிழுக்கு உயிர்கொடுத்தது. அதைப் பாடிக்கொண்டே தேசத்திற்காக தடியடி பட்டோம். சிறை சென்றோம்” என்று தமிழ்நாட்டின் மூத்த சுதந்திரப் போராட்ட வீரர் டி.எஸ்.எஸ்.ராஜன் (1980-1953) பெருமையுடன் கூறுகிறார். பாரதியார் புதுவையில் தங்கியிருந்தபோது அவரோடு நெருங்கிப் பழகியவர் பாவேந்தர் பாரதிதாசன். “தமிழ் மொழியின் உயிரை தோளேந்தி காத்த எழில் சுப்பிரமணிய பாரதியார்” என்று மகுடம் சூட்டி மகிழ்கிறார். பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம் (1907-1963) பாரதியார் எழுதிய பாடல்களில் நெஞ்சைப் பறிகொடுத்தவர். பாரதி பாடல்களில் உள்ள தீக்கனல் களை தமிழகம் எங்கும் பரப்பியதில் முன்னின்றவர்.
தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகம் இருப்பது எதற்காக என்று கேட்ட பாடல் தான் அவரு டைய கடைசிப்பாட்டு. அந்தப் பாட்டிலே எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பார் அதிர பிரகடனம் செய்கிறார். மனு (அ) தர்ம வேதாந்தத்தின் அடிப்படைக் கொள்கையான “மாயை”யைக் கண்டால் பாரதி சீறி எழுவார். “ நடுக் கூடத்தில் உன்னோடு உரையாடிக் கொண்டிருக்கும் உனது மனைவி மாயையா? தங்க விக்கிரகங்களைப் போல விளையாடிக் கொண்டிருக்கும் உனது குழந்தைகள் மாயையா?” என்று பாரதி ஆவேசத்தோடு கேட்கிறார்.
“ வீடுகளிலும், வீதிகளிலும் பள்ளிகளிலும் பாரதியார் கீதங்களும் கருத்துக்களும் முச்சுக்காற்றைப் போல ரத்தத்தோடு ரத்தமாய், உயிரோடு உயிராய் கலந்து கொள்ள வேண்டும்” என்று பாரதியாரிடம் நெருங்கிப் பழகிய பரலி சு.நெல்லையப்பர் (1889-1971) கூறுகிறார். அந்தக் கூற்று பொய்யாகவில்லை. இன்று வீடுகள் தோறும் வீதிகள் தோறும் பாரதியின் ஒளிக்கீற்று ஒளிவெள்ளம் பாய்ச்சி வருகிறது.
“இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதிதான். தேசபக்தி, சோசலிசத்தை வரவேற்ற மாபெரும் புதுமை, மாயாவாதத்தை ஏற்காத கடவுள் பக்தி, இது மூன்றும் கலந்த மிகச்சிறந்த கலவை பாரதி. இந்தியாவில் அக்காலத்தில் 1917 ரஷ்யப் புரட்சி பற்றி பாடியது பாரதியைத் தவிர வேறு யாருமில்லை” என்று 100-ஆண்டுகள் வாழ்ந்து நம்மிடமிருந்து விடைபெற்ற விடு தலைப் போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவின் புகழ்மொழி. கட்டபொம்மன், பகத்சிங் போன்ற எண்ணற்ற தியாகச் செம்மல்கள் தூக்குக் கயிறை முத்த மிட்டும், சிறைப்பட்டும், அடிபட்டும், மிதி பட்டும் தியாக வேள்வியில் பெறப்பட்டது நமது சுதந்திரம். அந்நிய கிழக்கிந்தியக் கம்பெனியும், பிரெஞ்சுக் கம்பெனியும், டச்சுக் கம்பெனியும் நாட்டின் செல்வ வளத்தை சூறையாடினர்.
“பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்று பாரதி குமுறினார். இன்று தாய் நாட்டின் திருக்கோவில்களாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களான துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே போன்றவை அடிமாட்டு விலைக்கு அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பந்தி வைக்கப்படும் அவலம் அரங்கேறுகிறது. இந்த தேசவிரோத கொடுமைகளுக்கு எதிராக மக்கள் வெள்ளம் கடல் அலை போல் ஆர்ப்பரித்து எழுவதைக் காண முடிகிறது. பாரதியின் போர் முரசம் தேசமெங்கும் ஒலிக்கிறது. மக்களுக்கு உணவளித்து உயிர்தரும் உழவர் படையினரும், தொழிலாளர் படையினரும் கைகோர்த்து நின்று அராஜக ஆட்சியாளர்களை அதிரவைக்கும் போர்க்களம் நாளுக்கு நாள் எழுச்சி பெற்று வருகிறது. விடுதலைப்போரில் பாரதி போர்க்களக் கவிஞன். அவரது பாடல்கள் தடை செய்யப்பட்டன. அவை தேசத் துரோகம் என்று சித்தரிக்கப்பட்டன. ஆனாலும் இறுதி வெற்றி அன்றும்-இன்றும் பாரதிக்குத்தான்.
இன்று (டிசம்பர் 11) மகாகவி பாரதியார் பிறந்த நாள்