மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு!
கண் மருத்துவர்கள் மாநாட்டில் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
சென்னை, ஜூலை 5- தமிழ்நாடு மருத்துவம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். கண் புரை அறுவை சிகிச்சை தொடர்பான சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 5) தொடங்கிய கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் பேசிய அவர், மாநிலத்தில் அரசு கண் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் கண் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறி னார். தமிழகத்தில் கண்ணொலி திட்டம் 1972 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 2009 ஆம் ஆண்டு இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டதாகவும் அவர் தெரி வித்தார். தமிழகத்தில் சென்னையில் அகர்வால், சங்கர நேத்ராலயா, மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனைகள் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் கண்களை பாதுகாத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். மொரிஷியஸ் அமைச்சர் பங்கேற்பு மாநாட்டில் பேசிய மொரீசியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, இந்தியா மருத்துவத்தில் வெகுவாக முன்னேறியுள்ளது என்று கூறினார். மொரிஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவத்துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார். கண் மருத்துவ சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து கொள்ள இதுபோன்ற மாநாடு கள் மருத்துவர்களுக்கு பெரிதும் பயன் படும் என்று மாநாட்டிற்கு தலைமை யேற்று பேசிய கண் விழி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைவருமான பேராசிரியர் அமர் அகர்வால் கூறினார். உலகின் தலைசிறந்த கண் மருத்துவ நிபுணர்களுடன் வளர்ந்து வரும் மருத்துவர்கள் உரையாடும் வாய்ப்பை இது போன்ற மாநாடு களில் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 1000 கண் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் , அறுவை சிகிச்சை நிபுணர்கள், பங்கேற்றுள்ளனர்.