tamilnadu

img

ரஜினி கட்சி தொடங்குவதால் தமிழக அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது... சென்னையில் கே. பாலகிருஷ்ணன் பேட்டி...

சென்னை:
கம்பெனி போல் கட்சி ஆரம்பிப்பதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும், தாக்கமும் நிகழாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64வது நினைவு தினமான ஞாயிறன்று (டிச.6) சைதாப்பேட்டை எம். சி. ராஜா விடுதியில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

டாக்டர் அம்பேத்கர் உயர்த்திப்பிடித்த சமூகசமத்துவத்தை பாதுகாக்கிற போராட்டத்தையும், சமூக ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல்ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி முன்னெ டுத்துச் செல்லும்; உறுதியோடு நிறைவேற்றும்.நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தினந்தினம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகளை கூட சிதைக்கிறார்கள். சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உயர்த்தி பிடிக்கும் சில சக்திகள், தலித் மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதலை தொடுத்து வருகின்றன.

தலித் மாணவர்களுக்கு உதவித்தொகை மறுப்பு 
தலித் மாணவர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக வழங்கப்பட்டு வரக்கூடிய போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையை படிப்படியாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவில் 60 லட்சம் தலித் மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத மோசமான நிலை ஏற்படும். இதன்மூலம் மத்திய அரசு தனது சாதிய மேலாதிக்கத்தை, இந்துத்துவா கோட்பாட்டை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.

நாள்தோறும் ஒடுக்குமுறை 
தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தினந்தோறும் ஒடுக்குமுறையும், சமூக அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. திருவள்ளூரில் ஒரு கிராமத்தில் பொதுப்பாதை வழியாக அருந்ததியர் உடலை எடுத்து செல்ல அனுமதிக்காததால், வயல் வழியாக கொண்டு சென்று அடக்கம்செய்துள்ளனர். அத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

பயிர்சேதத்திற்கு உரிய இழப்பீடு 
செய்தியாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், நிவர் புயல் இழப்பை மாநில அரசு முழுமையாக கணக்கிடவில்லை. தோராயமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர், நாகை-திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மூழ்கியுள்ளது. பொதுச்சொத்துக்களும் சேதம் அடைந்துள்ளன. மாநில அரசு உரிய முறையில் இழப்பை கணக்கிட்டு நிவாரணத்தை பெற வேண்டும்.மத்திய அரசு, மாநில அரசு கேட்கும்நிவாரணத்தை அல்லது உண்மையான சேதத்தை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை வழங்குவதில்லை. மாநில அரசும், நிவாரணத்தை பெறுவதற்கு அக்கறை காட்டுவதில்லை என்றும் அவர் கூறினார்.

பகல் கனவு
ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறித்து எழுப்பியகேள்விக்கு பதிலளித்த பால கிருஷ்ணன், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். அவர் வருவதால் தமிழக அரசியலில் பெரிய மாற்றமோ, தாக்கமோ ஏற்படும் என்று தோன்றவில்லை. திடீரென்று ஒரு நாள் கம்பெனிஆரம்பிப்பதுபோல், கட்சி ஆரம்பித் தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அரசியல் என்பது மக்களின்பிரச்சனைகளோடு இணைந்து செய்ய வேண்டியது. அவர் கட்சி ஆரம்பிப்ப தால் பாஜக- அதிமுகவை எதிர்க்கும் அணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிசயம், அற்புதம் எல்லாம் ஒன்றும் நிகழாது. அவர் பகல் கனவு காண்கிறார்.அது பலிக்காது என்றும் அவர் கூறினார்.

;