ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்க விசைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், செப்.23- நெசவு தொழிலை அழிக்கும் ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் அம்மையார் குப்பத்தில் திங்களன்று (செப்.22), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அம்மை யார் குப்பம், வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், வெடியங்காடு, பள்ளிப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, அத்தி மாஞ்சேரி, திருத்தணி பகுதியில் உள்ள மத்தூர், புஜ்ஜிரெட்டிபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு லுங்கிகள், இலவச வேட்டி, சேலைகள், சுடிதார் போன்ற ரகங்கள் நெய்யப்படுகிறது. இங்கு நெய்யப்படும் துணிவகைகள் அரபு நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. பாஜக ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விசைத்தறி நலிவடைந்து வருகிறது. பருத்தி, நூல் விலைகள், உதிரி பாகங்களின் விலைகளும் கடுமையாக உயர்த்தியுள்ளது. நடைமுறையில் இருந்த குழு காப்பீட்டு திட்டம், மோடி பாஜக அரசு வந்ததிலிருந்து நிறுத்தியுள்ளது. இதனை அமல்படுத்த வேண்டும், ரூ.1 லட்சமாக இருந்த விசைத்தறி, 2 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும், திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், நல வாரிய பண பயன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், மின் கட்டணம் மாதாமாதம் கணக்கீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திரு வள்ளூர் மாவட்ட விசைத்தறி நெச வாளர்கள் சங்கத்தின் (சிஐடியு), சார்பில் திங்களன்று (செப் 22), ஆர்.கே.பேட்டை அம்மையார் குப்பம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விசைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.ஜி.வேலு தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட துணைச் செய லாளர் கே.ராஜேந்திரன், விசைத்தறி நெச வாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கே.பிருந்தாவனம், மாவட்ட தலைவர் பி.இ.நேதாஜி, பொருளாளர் ஏ.என்.கிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட குழு உறுப்பினர் டி.கே.வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
