சென்னை:
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்காக ரூ.5604.84 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கும், சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பித்துள்ளோருக்கும், பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவதற்காக ரூ.5,604.84 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.அதில், “ தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு பொங்கல் பரிசு அறிவித்து வழங்கி வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2,500 வழங்கப்படும். இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும்.
பொங்கல் பரிசு ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும். இதற்காக ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் ஆண்டான வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.