ஓசூர் நீதிமன்ற தீர்ப்பின்படி உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி, அக். 11- கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராயக்கோட்டை அருகே ஏனுசோனையில் வாரிசு மூலம் பாத்தியப்பட்ட சுந்தரேசன், பாக்கியம்மா, ஜெயம்மா ஆகியோரின் 2.9 ஏக்கர் நிலம் சிலரால் 9.7.2008 இல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு கைப்பற்றும் நடவடிக்கைக்கு 2015 இல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மூன்று முறை ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கு மூலம் காவல் துறையினர், வருவாய் அலுவலர்கள் பாதுகாப்பு மூலம் பாதுகாப்புடன் நிலத்தை ஒப்படைவு செய்ய கோரப்பட்டது. கடந்த ஜூன் 6ஆம் தேதி ஓசூர் முதன்மை துணை நீதிமன்ற நீதிபதி பி.சண்முகராஜ் உத்தரவின்படி சூளகிரி காவல் ஆய்வாளர், காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஏனுசோனை வழக்குக்கு உட்பட்ட நிலம் நீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்படைவு செய்ய ஆணையிடப்பட்டது. இதையடுத்து, நிலத்திற்கு பாத்தியப்பட்ட தீர்ப்பின்படியான சுந்தரேசன், பாக்கியம்மா, ஜெயம்மா ஆகியோரிடம் ஓசூர் முதன்மை துணை நீதிமன்ற அலுவலர்களால் கிராம நிர்வாக அலுவலர், சூளகிரி காவல் துறையினர் முன்பு ஒப்படைவு செய்யப்பட்டது. மேலும் இந்நிலம் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் நில உரிமையாளர்கள் மேற்கொள்ளலாம் எனவும் நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்தனர்.
