tamilnadu

img

கந்துவட்டி கும்பலை கண்டித்து கூலி தொழிலாளி சாலையில் தர்ணா

கந்துவட்டி கும்பலை கண்டித்து கூலி தொழிலாளி சாலையில் தர்ணா

 ராணிப்பேட்டை, ஜூலை 19 - ஆற்காடு அருகே கந்துவட்டி கும்பலிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மீட்டு தர கோரி வெள்ளியன்று (ஜூலை 18) கூலி தொழிலாளி  தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், விளாப்பாக்கம் அடுத்த சின்னத்தக்கை கிராமத்தை சேர்ந்த வடிவேல் (35) கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரிடம் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் அவசர தேவைக்கு வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதுவரை மாதம் ரூ. 2 ஆயிரம் என ரூ. 80 ஆயிரம் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் வடிவேலு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வட்டிக்கு பணம் கொடுத்த கருணாகரன் வாகனத்தை மடக்கி வடிவேலுவை தாக்கிவிட்டு  அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று விட்டதாக வடிவேலு திமிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த 1 மாத காலமாக தனது வாகனத்தை மீட்டு தராமல் காலம் தாழ்த்தி கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக பேசி வந்ததால் ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட இருவரும் ஆரணி - ஆற்காடு தேசிய  நெடுஞ்சாலையில் அமர்ந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில்  போராட்டம் கைவிடப்பட்டது.