தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கண்ணனாற்றில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டு மழைநீர் அருகில் உள்ள ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களுக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறியது.
மதுக்கூர் ஒன்றியம் பெரியக்கோட்டை கண்ணனாற்றில் மழைநீர் அதிகளவு வந்ததன் காரணமாக ஆற்றின் கரை 90 அடி நீளத்துக்கு உடைந்தது. இதனால் மழைநீர் அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. தகவல் அறிந்ததும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் ஆகியோர் பெரியகோட்டைக்கு சென்றனர்.
உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு வாகனத்தில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் டிராக்டரில் ஏறி நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று, பின்னர் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஆற்றங்கரையில் நடந்து சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.
அப்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து ஆற்றின் கரையை தற்காலிகமாக சீரமைக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டனர். உடனடியாக அங்கு சவுக்கு மரங்கள், மணல் மூட்டைகள் ஆகியவற்றை கொண்டு கரையை சீரமைக்கும் பணியில் 150 பணியாளர்கள் ஈடுபட்டனர்.