tamilnadu

img

மக்களிசைப் பாடகர் வைகறை கோவிந்தன் காலமானார்.... கலை இலக்கிய மேடைகளில் மக்களை ஈர்த்தவர்... தமுஎகச புகழஞ்சலி

சென்னை:
மக்களிசைப் பாடகர் வைகறை கோவிந்தன் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் இரங்கல் மற்றும் புகழஞ்சலியை செலுத்தியுள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ( பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

வைகறை இசைக்குழுவின் தலைவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் போளூர் கிளையின் தலைவரும், மக்களிசைப் பாடகருமான வைகறைகோவிந்தன் மறைவுக்கு தமுஎகச மாநிலக்குழு வீரவணக்கம் செலுத்துகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் உருவாக்கிய எண்ணற்ற இசைக்குழுக்களில் செயற்திறன் மிக்கது வைகறைஇசைக்குழு. திருவண்ணாமலை மாவட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த இசைக்குழுவில் வேலூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் ஓர் அங்கம். எண்பதுகளின் பிற்பகுதியில் கோவிந்தன், சுகந்தன் ஆகியோரைக் கொண்டு வைகறை இசைக்குழுஉருவாக்கப்பட்டது. இக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆயிரக்கணக்கான மேடைகளில்  இசைப்பாடல்களைப் பாடி தங்கள் பணியைச்செய்தது. கலை இலக்கிய இரவுகள் மிகவும் வீச்சோடு நடத்தப்பட்ட அந்தக் காலங்களில் கலை இலக்கியஇரவு மேடைகளில் மக்களை ஈர்க்கும்மகத்தான பணியை இந்தக் கலைஞர்கள் செய்தனர். நவகவி, வையம்பட்டி முத்துச்சாமி போன்றவர்களின் பாடல்களை இசையமைத்து மேடைதோறும் இவர்களது குழு முழங்கியது. அக்குழுவில் முன்னிலைப் பாடகராக இருந்த கோவிந்தன் முற்றிலும் நாட்டுப்புற இசையில் கட்டமைக்கப்பட்ட பாடல்களை பாடுவதில் தனித்துவம் மிக்கவராக திகழ்ந்தார். சாரட்டு வண்டி கட்டி..., பொண்ணு பொறக்குமா ஆணு பிறக்குமா.., குந்த குடிசையில்ல..., தாரகை பூக்கின்ற தோரண கூரை... போன்ற பாடல்கள் வைகறை கோவிந்தன் குரலில் கூட்டத்தை ஈர்த்தவை.

குழுவில் இவருடன் இணைந்து பாடிக்கொண்டிருந்த மற்றொரு பாடகரான சுகந்தன் சில ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். ஆனாலும் கோவிந்தன் தனது இணையர் மஞ்சுளாவையும் இணைத்துக்கொண்டு  இசைக்குழுவை தொடர்ந்துநடத்திவந்தார். பள்ளி ஆசிரியர் பணிக்கிடையிலும் தொடர்ந்த அவரது இசைப்பயணத்தை அவரைப் பீடித்தபுற்றுநோயாலும் கூட தடுக்க இயலவில்லை. தனது இறுதிக்காலம் வரையிலும், சிகிச்சைக்கு செல்வதற்கு சிலநாட்கள் முன்பு வரையிலும் கூடமேடைகளில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த வைகறை கோவிந்தன் சிகிச்சை பலனின்றி நவம்பர் 28 அன்று காலமாகிவிட்டார். அவரது மறைவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்திற்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும்.முற்போக்கு இடதுசாரி இயக்கங்களின் இசை வரலாற்றில் மதிக்கத்தக்க பங்களிப்புடன் பயணித்து வந்த வைகறை இசைக்குழுவின் தலைவர் கோவிந்தனின் மறைவுக்கு அமைப்பின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் தோழர்களுக்கும் அவரது சக இசைக்கலைஞர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

சிபிஎம் இரங்கல்
மக்களிசைப் பாடகர் வைகறை கோவிந்தன் மறைவுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

;