ஜன.24 வரை வறண்ட வானிலையே நிலவும்
சென்னை,ஜன.18- தமிழ்நாட்டில் வருகிற 24 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால் சனிக்கிழமை (ஜன.20) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஜன. 21 முதல் 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலை.,யில் பெண்கள் கிரிக்கெட் போட்டி
காரைக்குடி, ஜன.18- இந்திய பல்கலைக்கழக கூட்ட மைப்பின் சார்பில் காரைக்குடி அழ கப்பா பல்கலைக்கழக உடற்கல்வி யியல் கல்லூரி வளாகத்தில் தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கி டையே ஜனவரி 18 முதல் 22 வரை 5 நாட்கள் நடைபெறும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா வியாழனன்று நடைபெற்றது.
அழகப்பா பல்கலை., துணை வேந்தர் க.ரவி தலைமை வகித்தார். பதிவாளர் அ.செந்தில்ராஜன் வர வேற்றார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்ராஜ், காரைக்குடி வட்டாட்சியர் தங்கவேல், கோட்டையூர் பேரூராட்சி தலைவர் சோலை, மாவட்ட கால்பந்து கழக உறுப்பினர் கார்த்திகேயன், அழகப்பா பல்கலை., உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமரன், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொ) முரளிராஜன், துணை உடற் கல்வி இயக்குநர் நாகராஜன், யோகா படிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பா ளர் எஸ்.சரோஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு மீண்டும் ஒத்திவைப்பு
விழுப்புரம்,ஜன.18- விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.19) ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
2021-ஆம் ஆண்டில் முதல்வரின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த தாக ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக அப்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணன் மீதும் சிபிசிஐடி காவல்துறை யினர் வழக்குப் பதிந்தனர். இதில் இரு வருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை வேறு மாவட்டத் திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்ததால், டிசம்பர் 19, ஜனவரி 6 ஆகிய தேதி களில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் விசாரணையை தொடர்ந்து நடத்தி, ஜனவரி 24-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் ஆஜரானார்.
அப்போது, ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேல்முறையீடு செய்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை வெள்ளிக்கிழமை (ஜன.19) ஒத்தி வைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.