பிச்சாவரத்தில் படகு ஓட்டும்போது ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணம் சிதம்பரம்,
செப்.6- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை ( செப்.6) மாலை 10 பயணிகளை ஏற்றுக் கொண்டு சுரபுண்ணை வனக்காட்டிற்கு படகு சென்றது. படகை கிள்ளை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் ஓட்டிச்சென்றார். படகு வனக்காடுகளுக்கு சென்று திரும்பி வந்தது. படகு நிறுத்தும் இடம் அருகே வரும் போது, சங்கருக்கு திடீரென வலிப்பு வந்து மயங்கி தண்ணீரில் விழுந்தார். சுற்றுலா பயணிகள் அலறினர். சுற்றுலா பயணிகளை சக படகு ஓட்டுநர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர், மேலும் மற்ற படகு ஓட்டுநர்கள் நீரில் மூழ்கிய சங்கரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென்மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய ரயில்கள்
செப்.11 முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் சென்னை, செப். 6– சென்டைன எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை - திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் செப்.11 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும் .மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9 வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை. சென்னை - திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11 முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும். சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறு மார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.சென்னை - மும்பை விரைவு ரயில் வரும் 11 முதல் நவம்பர் 10 வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே அந்த அறிக்கையில் கூறியுள்ளது. உச்சம் தொட்டது தங்கம் விலை சென்னை,செப்.6- 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.