தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளராக, பெண்ணுரிமை போராளியாக, சமூக ஆர்வலராக திகழ்ந்த டாக்டர் வசந்தி தேவியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளராக, பெண்ணுரிமை போராளியாக, சமூக ஆர்வலராக திகழ்ந்த டாக்டர் வசந்தி தேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர் வசந்தி தேவி ராணிமேரிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கி, பின்னர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் திறம்பட பணியாற்றிவர். ஆசிரியர் இயக்கம், பெண்கள் இயக்கம், கல்வி உரிமை என பல்துறைகளில் அயராது உழைத்தவர். “பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்” என்ற அமைப்பை துவக்கி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கும் - பொதுமக்களுக்கும் உணர்த்தியவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய காலத்தில் பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தத்தில் அயராது பாடுபட்டவர். சர்க்கரை செட்டியாரின் பேத்தியான டாக்டர் வசந்தி தேவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவாளராக விளங்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வலுவாக குரலெழுப்பியவர். அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்கும், கல்வி சார்ந்த அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.