தென்காசி:
குற்றால அருவிகளில் குளிக்க ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் நின்று ஆரவாரத்துடன் உற்சாகமாக குளித்துச் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தளமான குற்றால அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த சீசன் காலகட்டத்தில் குளிப்பதற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் வந்து நீராடி செல்வது வழக்கம்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாகச் சுற்றுலா பயணிகள் வருகையின்றி அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தமிழ்நாடு அரசு கொரோனா தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றால அருவிகள் மட்டும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது. குற்றாலத்தை திறக்கக் கோரி வியாபாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கைவிடுக்கப்பட்டது.இதனையடுத்து திறக்கப்பட்டதால், குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.