tamilnadu

img

கூவம் கரையோர வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு : சாலை மறியல்

திருவேற்காடு, மே 17- திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவேற்காடு நகராட்சி 14ஆவது வார்டுக்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இவர்கள் 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் கூவம் நதி ஓரம் உள்ளது. இதனால் கூவம் நதி ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் பூங்கா அமைக்க கூவம் நதி புனரமைப்பு திட்டத்தின்கீழ் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆவடி பருத்திப்பட்டு கூவம் நதியில் இருந்து சென்னை தீவுத் திடல் வரை உள்ள கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த 300 வீடுகள் மட்டும் அகற்றப்படவில்லை.

இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது.  இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடை பெற்றது. அப்போதும் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கணக்கு எடுக்கப்பட்ட வீடு களின் உரிமையாளருக்கு வீடுகளை இடிக்க வருவாய் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் வியாழனன்று அந்த பகுதிக்கு வந்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறிய லில் ஈடுபட்டவர்களை காவல் துறை யினர் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

;