tamilnadu

சென்னை மற்றும் காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

கோவில் நிகழ்ச்சிகளில்  நகை திருடிய பெண் கைது 

சென்னை,ஏப். 27 வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை பையுடன் காணாமல் போனது. இதுபற்றி வடபழனி உதவி ஆணையர் ஆரோக்ய பிரகாசம், ஆய்வாளர் பாலுச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள 2 கேமராக்களை ஆய்வு செய்த போது பட்டுச்சேலை உடுத்தி நகைகளை அணிந்தபடி சுற்றித்திரிந்த பெண் ஒருவர் சிக்கினார். அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அந்த பெண்ணை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர் மீண்டும் கைவரிசை காட்டுவதற்காக கோவிலுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அதன்படி மீண்டும் கோவிலுக்கு வந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் விஜயசாந்தி, கடலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.விஜயசாந்தியை கைது செய்த போலீசார் 4 பவுன் நகையை மீட்டனர். இவர் 2006-ம் ஆண்டில் இருந்து இதுபோன்று கோவில்களில் திருமண நிகழ்ச்சியில் புகுந்து நகை திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

அம்பத்தூர், ஏப். 27-பழைய வண்ணாரப்பேட்டை நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (55) பெயிண்டர். இவர் சனிக்கிழமை (ஏப்.27) காலை கிழக்கு முகப்பேர் இளங்கோ தெருவில் புதிதாக கட்டிவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். முதல் தளத்தில் உள்ள பால்கனியில் பெயிண்ட் அடித்துக் 

கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மின் கம்பியின் மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது

குறித்து ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரை விசாரித்து வருகிறார்கள்.


போலீஸ் என ஏமாற்றிய இருவர் கைது 

சென்னை,ஏப். 27- அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை ரயில்வே காலனி 1-வது தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் ஞானவேல். இவரது டீக்கடைக்கு கடந்த வியாழனன்று மாலை வந்த 2 பேர் நாங்கள் போலீஸ் என்று கூறினர். இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.40ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஞானவேலை மிரட்டினர். சந்தேகமடைந்த கடை ஊழியர் பாண்டியன் உடனடியாக அமைந்தகரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் பெருந்துறை முருகன் 

மற்றும் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய இருவரையும் பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ் என்கிற கல்லறை சதீஷ் (29) சூளைமேட்டைச் சேர்ந்த மதிவாணன் (33) என்பது தெரியவந்தது. அமைந்தகரை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மிரட்டி பணம் வசூல் செய்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட கல்லறை சதீஷ் மீது திருவேற்காடு, பூந்தமல்லி, கே.கே.நகர், அமைந்தகரை, குன்றத்தூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.


காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணி தற்கொலை- போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்,ஏப். 27- காஞ்சிபுரம் அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (25). இவரது கணவர் கார்த்திக் (30). இவர் கட்டிடத் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அனைவரும் தூங்கிய பிறகு நள்ளிரவில் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உள்ள மின் விசிறியில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திவ்யாவின் தந்தை வேலுமணி மாநகர போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் தியாகு 

(30). திருமணமாகாதவர். இவர் வெள்ளியன்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
;