tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எண்ணூர் முகத்துவார ஆற்றில் ரசாயன கழிவுகள்: அதிகாரிகள் ஆய்வு

சென்னை, ஜூன் 14-  எண்ணூர் முகத்துவார ஆற்றில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், காட்டுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இறால், நண்டு, மீன் ஆகியவற்றை பிடித்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த முகத்துவார ஆற்றில் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவன கழிவுகளை விடுவதால், ஆற்று நீர் மாசுபட்டு நீர்வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன. இந்நிலையில், பக்கிங்காம் கால்வாய் – முகத்துவார ஆறு இணையும் பகுதியில் கடந்த இரு தினங்களாக தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கருப்பு நிறத்தில் மிதக்கிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஆற்றை பார்வையிட்டு மிதக்கும் கருப்பு நிற கழிவை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனாலும், தொடர்ந்து இந்த படலம் அதிகப்படியாக மிதந்து வருவதால், இது எந்த தொழிற்சாலையில் இருந்து வரக்கூடிய கழிவு என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு தனியார் நிறுவன கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே பக்கிங்காம் கால்வாய் மற்றும் முகத்துவார ஆற்றில் விடுவதால் ஆற்றில் உள்ள இறால், நண்டு போன்றவை அழிந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், ரசாயன கழிவால் ஆற்று நீர் மாசடைந்து நீர்வாழ் உயிரினங்களில் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மீன்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இயந்திர கோளாறு காரணமாக அந்தமான், மும்பை விமானங்கள் ரத்து

சென்னை, ஜூன் 14-  அந்தமானில் இருந்து வெள்ளியன்று  காலை 10.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், பகல் 12.55 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். அதன்பின்னர் அந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து பகல் 1.35 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால், காலை அந்தமானில் இருந்து புறப்பட வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, அந்தமானில் இருந்து புறப்படாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் வரை இயந்திர கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்தமான்- சென்னை ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த சுமார் 130 பயணிகள் மாற்று விமானங்களில், மும்பைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதேபோல் அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, அந்தமான்- சென்னை, சென்னை- மும்பை ஆகிய 2 தனியார் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அதில் பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருந்தால்  மட்டுமே நடிக்க முடியும்

சென்னை, ஜூன் 14- ‘‘நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி சினிமாவில் நடிக்க முடியும்’’ என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவது போல, நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமரா முன்நின்று நடிக்கும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்-நடிகைகள் அனைவருமே நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்கவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேருவதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள உறுப்பினர்களின் மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும், ஈமச்சடங்குக்கும் செலவிடப்பட்டு வருகிறது. இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்து கொண்டிருப்பவர்களிடம் அதன் பயனை எடுத்துரைத்து, வருகிற 20-ந் தேதிக்குள் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நடிகர்,நடிகைகளின் மேலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

வங்கக் கடலில் சூறாவளி எதிரொலி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

கடலூர், ஜூன்14- வங்கக் கடலில் சூறாவளி காற்றின் எதிரொலியாக கடலூர் மாவட்டம் மீன வர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறி வுறித்துள்ளனர். கடலூர் துறைமுகத்திலிருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம், சொத்திகுப்பம், ராசா பேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். தற்பொழுது அமுலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாள் மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்துவிட்டது.  இந்த நிலையில்  நள்ளிரவு கடலூர் துறைமுகம் மீனவர்கள் மீன் பிடிக்க தயாராக இருந்தனர். இதற்கிடையே இந்திய வானிலை மையம் அறிவிப்பின்படி வங்க கடலில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரித்து இருந்தது. இதனை அடுத்து, கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்கு நர் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் ஆழ்கட லுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்லக் கூடாது என எச்சரித்துள்ளனர். இத னால்,  தடைக்காலத்திற்கு பின் மீன்பிடிக்க ஆர்வமுடன் இருந்த மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.