tamilnadu

img

புதிய வேளாண் சட்டங்களால் இலவச அரிசி ரத்தாகும்..... சென்னை உண்ணாநிலை போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு....

சென்னை:
புதிய வேளாண் சட்டங்களால் ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி ரத்தாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வெள்ளியன்று (டிச.18) சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

இந்தியாவில் விவசாயிகள் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர். விவசாயத்தில் கார்ப்பரேட்டை அனுமதிக்க கூடாது என்பதற்காக போராட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை என்கிறார். தற்போது, பண்ருட்டியில் ஒரு கிலோ முந்திரியை 450 ரூபாய்க்கு வாங்கி 11,000 ரூபாய்க்கும், நீலகிரியில் கிலோ தேயிலையை 15 ரூபாய்க்கு வாங்கி 4700 ரூபாய்க்கும், கிலோ காபி கொட்டை 180 ரூபாய்க்கு வாங்கி 11,800 ரூபாய்க்கும், சோளத்தை 18 ரூபாய்க்கு வாங்கி 4000 ரூபாய்க்கும் விற்கிறார்கள். விவசாயிகளா சர்வதேச சந்தையில் சென்று விற்கிறார்கள்.அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பு வைத்தால் அதற்கு பெயர் பதுக்கல். அவ்வாறு செய்பவரை கைது செய்யலாம். புதிய சட்டத்தின்படி பதுக்கலை சேமிப்பு என்று மாற்றி சட்ட அங்கீகாரம் தருகின்றனர். இந்த நிலையில் கார்ப்பரேட்டுகள் முழுமையாக அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்ய ஆரம்பித்தால், மக்கள் விலை கொடுத்து வாங்க முடியுமா? இது மக்களின் வாழ்வை காப்பதற்கான போராட்டம்.

மத்திய அரசு சட்டப்படி அரசு நேரடி கொள்முதல் செய்யாது. இந்திய உணவு கழகம் மூடப்படும். ரேசன் கடையில் இலவச அரிசி நிறுத்தப்படும். ரேசன் முறையே நீக்கப்படும். மின்சார திருத்தச் சட்டம் வந்துவிட்டால் இலவச மின்சாரம் ரத்தாகும். தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி விவசாயிகள் போராடுகிறார்கள்.தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சி ஆட்சி மாற்றத்தை பறைசாற்றுகிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் எல்லாம் ஆட்சி மாற்றம் என்கிறார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் ஆட்சிமாற்றத்தை உருவாக்கும்.அரசாங்க கஜானா காலியாகி விட்டது. ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ள நிலையில், மேலும் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். ஆட்சிக்கு மீண்டும் வர முடியாது. திமுக ஆட்சிக்கு வந்து வட்டி கட்டியே தீர முடியாத அளவுக்கு கடனை வாங்குகிறார்கள். மோடி, எடப்பாடி சேர்ந்து வந்தாலும், தனித்தனியாக வந்தாலும், எத்தனை வேடத்தில் வந்தாலும் மக்கள் மத்தியில் எடுபடாது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, அதற்கு இணையாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

அ.சவுந்தரராசன்
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், விவசாயிகளுக்கு நன்மை தரும் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளனர். சட்டவிரோதமான பதுக்கலை, இருப்பு என சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் சட்டமாக்கியுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்துள்ள மோட்டார் வாகன தொழிலையும் கார்ப்பரேட்மயமாக்கி வருகின்றனர்.1926 முதல் கொண்டு வரப்பட்ட 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுகின்றனர். வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்றி சட்டம் கொண்டு வருகின்றனர். ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அமைப்புகளை சிதைத்து வருகின்றனர். பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகள் எழுந்து நிற்கின்றனர். அந்தப்போராட்டத்தை வலுவாக கொண்டு செல்வோம் என்றார்.

;