கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த கொத்தடிமை தொழிலாளர்கள்
கடலூர், ஆக. 18- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த இருளர் சமுதாயத்தின் ஆறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கடலூர் மாவட்டம், திருவதிகை அருகே உள்ள தங்கசெட்டி என்பவர் கரும்பு வெட்டும் பணிக்காக அழைத்து வந்துள்ளார். 3ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திற்கு சென்று அழைத்து வந்த நிலையில் அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுப்ப தாகவும், முன்பணமாக ஆண்களுக்கு 10 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் என்று அவர் வழங்கி வந்துள்ளார். இதனை நம்பிய ஆறு குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் அங்கிருந்து புறப்பட்டு திருவதிகைக்கு வந்தனர். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு வெட்டும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன்பணம் வாங்கி யதைத் தவிர வேறு எந்த சம்பளமும் கொடுக்காமல், சாப்பாடும் சரியாக வழங்காமல் பணி வாங்கியதாக கூறப்படு கிறது. தொடர்ந்து இவர்கள் பணி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட மருத்துவமனைக்கு அனுப்பாமல் அடித்து அவர்களை துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் தெரியவருகிறது. மேலும் இவர்கள் தப்பித்து விடாமல் இருப்பதற்கு எந்த நேரமும் இவர்களை கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது 22 பேரில் 14 பேர் மற்றும் மூன்று கைக்குழந்தைகள் என 17 பேர் தப்பித்து மூன்று நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். கொத்தடிமை மீட்கும் குழுவினர் இவர்களை தொடர்பு கொண்டு கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வர சொன்னதன் அடிப்படையில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து தஞ்சம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி ஆவார். அவரிடமும் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளார்கள். அவர்கள் தங்களை ஒரு மனிதர்களாகவே நினைக்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்த அவர்கள், உணவு இன்றி, ஊதியம் எதுவுமே இல்லாமல் தங்கள் உடல் தேய்ந்து போய் நிற்பதாகவும், அப்பொழுது கூட நீங்கள் பல லட்சம் பணம் வாங்கி விட்டீர்கள் என கூறி தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்த னர். மேலும் கொத்தடிமைகளை மீட்ப தற்காக தற்போது அதிகாரிகள் குழு மற்றும் காவல்துறையினர் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.