tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னையில் வீட்டு வேலை செய்த சிறுமி அடித்துப் படுகொலை
ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் : தனி அதிகாரியை நியமித்து துரித விசாரணை நடத்த வலியுறுத்தல்  

சென்னை,நவ.5 - சென்னையில் வீட்டு வேலை செய்த  சிறுமி அடித்துப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனி அதிகாரியை நியமித்து துரிதமாக விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

தஞ்சை மாவட்டத்திலிருந்து வீட்டு  வேலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி சென்னையில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவர்களின் உறவினர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூர மான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

அமைந்தகரை மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது நவாஸ் மற்றும் அவரது மனைவி நாசியா. இவர்கள் தஞ்சை வேப்பத்தூர் பேரூ ராட்சி அம்மன் பேட்டை கிராமத்தில் இருந்து 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அச்சிறுமியை நாசியா,அவரது கணவர் நவாஸ் மற்றும் அவரது உற வினர்கள் பல்வேறு வகைகளில் தொட ர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி  நாசியா மற்றும் அவர்களது குடும்ப நண்பர்கள் சிலர் இணைந்து குழந்தை யை மிக மோசமாக சித்ரவதை செய்து உடல் முழுவதும் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளனர்.அவர்கள் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் உடலை குளியல் அறையில் போட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியே சென்று விட்டனர்.

இந்த கொடூரமான படுகொலை யை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இக்கொலையில் அமைந்தகரை காவல்துறை குழந்தைகளை பாலியல்  வன்முறையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் போக்சோ  மற்றும் எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும்  ஜே.ஜே. ஆக்ட் (J J act) சட்டப் பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நாசியா இப்படுகொலைக்கான காரணத்தை காவல்துறையிடம் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தனது கணவர் நவாஸ் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என் றும் சமீப காலமாக அவரின் பார்வை வீட்டில் வேலை செய்யும் சிறுமியின் பக்கம் திரும்பியதாகவும் எனவே தானும் தன்னுடைய நண்பர்களும் இணைந்து அச்சிறுமியை கொலை செய்ததாக காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

குற்றவாளிகளை பாதுகாக்கும்  நோக்குடன் காவல்துறை 

வறுமையின் பிடியில் உள்ள குழந்தையின் தாய் தன்னுடைய குழந்தையின் உடலை வாங்கிச் சென்று தனது சொந்த ஊரில் இறுதி நிகழ்வை கூட நடத்த முடியாமல் காவல்துறையின் உதவியை நாடிய போது சென்னை காவல்துறை சென்னையிலேயே சிறுமியின் உடலை எரியூட்டுவதற்கு உதவி செய்துள்ளது,

காவல்துறையின் இத்தகைய செயல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி  உள்ளது. மர்மமான முறையில் இறந்துள்ள அச்சிறுமியின் உடலை அடக்கம் செய்யாமல் காவல்துறையே எரிப்பதற்கு உதவியாக இருந்திருக் கின்றது என்பதை பார்க்கும்போது குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடன் காவல்துறை செயல்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் இதுபோன்று வறுமை யின் பிடியில் உள்ள ஏராளமான குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாமல் குழந்தை தொழி லாளிகளாக பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளியில் இடை விலகும் குழந்தைகள் குறித்து மிகவும் கவனத்துடன் இருந்து அக்குழந்தை களின் பள்ளிக்கல்வியை உத்தரவாதப் படுத்திட முழு முயற்சி எடுக்கவேண்டும்.

மேலும் இவ்வழக்கில் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் குழந்தையின் குடும்பத்திற்கு சட்டப் படியான நிவாரணத்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், குடியிருக்க வீடும் வழங்க வேண்டும். 

மேலும் எஸ்சி/எஸ்டி வன்கொடு மை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால்  தனி விசாரணை அதிகாரியை நியமித்து வழக்கை துரிதமாக நடத்தி குற்றவாளி கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்கக்கூடாது : தயாநிதிமாறன் எம்.பி.,

சென்னை, நவ.5- கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.,யான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த  வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,  தயாநிதிமாறன் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி புதிய மனுவை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், விசாரணை தொடங்க உள்ள நிலையில் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. இதை ஏற்கக் கூடாது. நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

ஆமைகளை பாதுகாக்க  ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு! 

சென்னை,நவ.5- தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகள், ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி பாதுகாக்கப்படும் என அப்போதைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் வகையில் தற்போது ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி (சிற்றாமைகள்) மற்றும் பச்சை ஆமைகள் வருகை தருகின்றன. ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் உள்ளூர் மீனவ தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆமை பாதுகாவலர் குழுக்கள் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பதற்கும், ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்ப உதவும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ டியூபர் இர்பான் விவகாரம்:  விளக்கம் கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ்

சென்னை,நவ.5- சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி, பிரபல யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப்போது, அறுவை சிகிச்சை அறையில் இருந்த இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை  வெட்டும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியிருந்தன. இதற்கு பலரும்  கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாள்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகாரளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இர்ஃபான் தரப்பில் இருந்து மருத்துவத்துறைக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது, இச்சம்பவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதியளித்த மருத்துவர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

புதிய தலைமைச் செயலகம் :  முன்னாள் எம்.பி.யின் வழக்கு தள்ளுபடி

சென்னை,நவ.5- புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற்றதற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கு தொடர்பாக அதிமுக ஆட்சியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் அமைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் விசாரணை ஆணையத்தை கலைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி ஜெயவர்தன் மனு தாக்கல் செய்தார். ஜெயவர்தன் தாக்கல் செய்த மனுவை கடந்தாண்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜெயவர்தன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சீமானால் உயிருக்கு ஆபத்து:  திருச்சி சூர்யா

மதுரை,நவ.05- நாம் தமிழர் கட்சியின் ஒரு ங்கிணைப்பாளர் சீமானால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். 

அந்த மனுவில், சீமான் மற்றும் சாட்டை துரைமுரு கனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது.  தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண் டும் என்று கோரியுள்ளார். 

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,நவ.5- கடந்த சில வாரங்களாக விமானங்கள், விமான நிலை யங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப் பட்டு வருகிறது. போலீசார் சோதனை செய்து பார்த்தால்  மிரட்டல்கள் வெறும் புரளி என தெரியவருகிறது. பெரும்பாலான மிரட்டல்கள் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமெயில் மூலமாக விடுக்கப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட நபர் களை கண்டுபிடிப்பதிலும் கடும் சவால் நீடிக்கிறது.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத் திற்கு செவ்வாயன்று (நவ.5) வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டது.  சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் வந்தது. இதை யடுத்து வெடிகுண்டு நிபு ணர்கள், தாம்பரம் நடை மேடை முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். 

போலீசார் திடீரென சோதனை செய்ததால்  தாம்பரம் ரயில் நிலையத் தில் பயணிகளிடம் பதற்றம் ஏற்பட்டது. 

ஓபிஎஸ் சகோதரர் மீதான  வழக்கில்  நவ.13ல் தீர்ப்பு

தேனி,நவ. 5-
பூசாரியை தற்கொலை க்கு தூண்டியதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்
னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் மீது பதிவான வழக்கில் நவம்பர் 13 ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஓ.ராஜாவுக்கு எதிரான அரசு தரப்பின் இறுதிக்கட்ட வாதம் முடிந்தது.

இந்நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி ஒ.ராஜா உள்பட 6 பேரும், அரசு  தரப்பு, எதிர் தரப்பு வழக்கறி ஞர்கள் ஆஜராக திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினர் குறித்த ஆய்வை ஊக்கப்படுத்த “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்”

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும்  அரசு

சென்னை,நவ.5- பழங்குடியினர் தொடர்பான  ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள் ளும் மாணவர்களை ஊக்கப்படு த்தும் வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணவரின்  குடும்ப ஆண்டு  வருமான வரம்பு ரூ.8  லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவருக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட  மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரமும் (3 வருடத்திற்கு) உதவித்தொகையாக வழங்கப் படும். இத்திட்டத்திற்கான நெறிமுறை களை “https://www.tn.gov.in/forms/deptname/1” என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம் ஆண்டில் செயல் படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப் பம் 05.11.2024 லிருந்து இணைய வழியிலும் (Online) மற்றும் இயன்முறையிலும் (Offline) வரவேற்கப்படுகின்றன. இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் “https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7” என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்கு மாறும் மற்றும் இயன்முறையில் (Offline) விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் “https://www.tn.gov.in/forms/deptname/1” என்ற  இணைப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தி னை இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு  30.11.2024 க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

மேற்கண்ட விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.