tamilnadu

img

மக்கள் நலத் திட்டங்களை சீர்குலைக்க கூட்டுச்சேரும் மக்கள் விரோத சக்திகள்... கேரளத்தில் நடப்பது என்ன?

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை அவமானப்படுத்தி, அதன் பெருமையைக் குலைத்திட, கடந்த சில வாரங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகமுன்னணியும், பாஜகவும் தங்கக் கடத்தல் வழக்கைப் பயன்படுத்திக்கொண்டு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இடது ஜனநாயகமுன்னணி அரசாங்கம் ஆகியவற்றைக் குறிவைத்து கலகங்களில் ஈடுபட்டிருக்கின்றன.

சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால், காங்கிரசும், பாஜகவும் அரசாங்கத்தின் மீதான தங்கள் தாக்குதல்களை வெளிப்படையாகவே விரிவுபடுத்தி இருக்கின்றன. மத்திய புலனாய்வு முகமை
கள் சிலவும் இத்தகைய இழி முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.

நான்கு முகமைகள்
இப்போது, நான்கு மத்திய புலனாய்வு முகமைகள் அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கின்ற, தேசியப் புலனாய்வு முகமை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை மற்றும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் ஆகிய அனைத்தும், அதனைப் பயன்படுத்திக்கொண்டு, பல்வேறு மாநில அரசாங்கங்களின் திட்டங்களுக்குள்ளும் விசாரணைகளை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றன.தூதரகம் ஒன்றிற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவது கடந்த ஜூலை மாதத்தில் தெரியவந்தவுடனேயே, முதல்வர் மத்திய அரசிடம், இதனை ஒரு பொருத்தமான மத்திய புலனாய்வுமுகமை மூலமாக விசாரணை செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். இது அவசியமானதாக இருந்தது. ஏனெனில், தங்கம் தூதரகத்தின் மூலமாக வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டதால், மாநில அரசாங்கம் விசாரணை செய்வதற்கான அதிகாரவரம்பெல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இது இருந்தது. இது தொடர்பாக, பயங்கரவாத நிதிப்பரிமாற்றம், அல்லது, தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றுடன் சந்தேகிக்கும் விதத்தில் காரணிகள் எதுவும் முதல்நோக்கில் (prima facie) இல்லையென்றபோதிலும்கூட, மத்தியஉள்துறை அமைச்சர் இதனை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தார். ஆரம்பத்தில் இந்த வழக்கைப் பதிவு செய்த சுங்கத்துறையும் இதன் விசார ணையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறையும் இதன்மீது செயல்படத்தொடங்கி,  முதலமைச்சரின் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராகவும், தகவல் தொழில்நுட்ப செயலாளராகவும் இருந்த சிவசங்கரைக் கைது செய்வதற்குக் காரணமாக இருந்தது. இப்போது விசாரணையை கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (கே-ஃபோன்), கொச்சி ஸ்மார்ட் சிட்டி, டாரஸ் திட்டம் மற்றும் இ-மொபிலிட்டி திட்டம் போன்ற மாநில அரசின் இதர திட்டங்களுக்கும் விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

‘லைப் மிஷன்’ திட்டத்தில்...
இதே சமயத்தில் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், இந்த வழக்கிற்குள் தாமாகவேஐக்கிய அரசு குடியரசுகளின் ரெட் கிரசெண்ட் ஆதரவில் கட்டப்படும் குடியிருப்புகள் (construction of flats by the United Arab 
Emirates’ Red Crescent) குறித்த விசாரணையில் மூக்கை நுழைத்துள்ளது. லைப் மிஷன்(Life Mission) என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக 2018இல் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 142 குடியிருப்பு
கள் கட்டித்தரும் திட்டத்தினை மேற்கொண்டிருக்கிறது. ரெட் கிரசெண்ட் இந்த லைப் மிஷனுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.  இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கேரள அரசாங்கமோ, அல்லது, லைப் மிஷனோ கட்சிக்காரர்கள் அல்ல. ஆயினும், ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அளித்த முறையீட்டின் மீது, குற்றப்புலனாய்வுக் கழகம் அந்நிய நன்கொடைகள் (முறைப்படுத்தல்) சட்டத்தின் (FCRA-ForeignContribution (Regulation) Act) கீழ்வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையில் லைப் மிஷனின் அதிகாரிகளைப் பிணைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசாங்கம், லஞ்ச ஒழிப்புத்துறையின் கீழான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப்பது தொடர்பாக, மாநில அரசுக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்கள் அந்நிய நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்தின்கீழ் வரையறைக்குள் வராது. கேரள உயர்நீதிமன்றம் லைப் மிஷன் அதிகாரிகள் தாக்கல் செய்த ஒரு மனுவின்மீது, இந்த திட்டம், அந்நிய நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள பிரிவின்கீழ் வராது என்று கூறி, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு இரண்டு மாதங்கள் தடைவிதித்திருக் கிறது.

மேலிடத் தலைமையை நிராகரிக்கும் சென்னித்தலா
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையும், அதன் தலைவர் சோனியா காந்தியும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், தேசிய புலனாய்வு முகமை மற்றும் போதைப்பொருள் பீரோ (Narcotics Bureau)போன்ற மத்திய புலனாய்வு முகமைகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்துத் துஷ்பிரயோகமான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ள அதே சமயத்தில்,  கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா மற்றும் கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சி ஆகியவை திரும்பத் திரும்ப மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் மற்றும் மத்திய புலனாய்வு முகமைகளின் விசாரணைகளை கோரிக்கொண்டிருக்கின்றன. ராகுல் காந்தி, சமீபத்தில் கேரளாவிற்கு வந்திருந்தபோது, கேரள இடது ஜனநாயக முன்னணியைப் பாராட்டி, இதேபோன்றே கருத்துக்களைக் கூறியிருந்தார். இதனை சென்னிதாலா நிராகரித்துவிட்டு, இதுபோன்று மாநில சமாச்சாரங்களில் மாநிலக் காங்கிரஸ் கட்சிதான் தீர்மானிக்கும்என்றார். மத்திய புலனாய்வு அமைப்புகளின் புலனாய்வுகள் தொடர்பாக வெளிவரும் பிரச்சனைகள் குறித்து இரு கட்சிகளுமே ஒரேமாதிரியாக அறிக்கைகள் வெளியிடுவதிலிருந்து, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

மகத்தான திட்டங்கள்
லைப் மிஷன், கேரளாவில் சொந்த வீடுகள் இன்றி இருக்கும் அனைத்துக் குடும்பத்தினருக்கும் வீடுகள் வழங்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள்  அளிக்கப்பட்டிருக்கின்றன. கே-போன் (K-Fon) திட்டம் என்பது ஒவ்வொரு கிராமத்திற்கும் இணையவழித் தொடர்பு (Internet Broadband connection) ஏற்படுத்தி, அனைத்து வீடுகளும், மாநிலத்துடன் இணைக்கப்படுவதைக் குறியாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி மற்றும் இ-மொபிலிடி (மின் பேருந்துகள் பயன்பாடு) ஆகியவை முக்கியமான வளர்ச்சித் திட்டங்களாகும். இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைத்திடவேண்டும் என்ற நோக்கத்துட னேயே மத்திய அமலாக்கத்துறையும், மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகமும் இவை தொடர்பான கோப்புகளைக் கோருவதும், அதுதொடர்பான அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

உட்கட்டமைப்புத் திட்டங்கள்
கேரள, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களின் மீதான தாக்குதல்கள், மத்திய தலைமைத் தணிக்கைத்துறைத் தலைவரின் (CAG) கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்(KIIFB-Kerala Infrastructure Investment Fund Board) தொடர்பான அறிக்கையுடன் விரிவடைந்திருக்கிறது. அவர், கேஐஐஎப்பி எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டுநிதி வாரியத்தின் மூலம் மாநிலத்தின் உள்கட்ட மைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக நிதிதிரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு இவ்வாரியம் சார்பில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய்கடன் மற்றும் பத்திரங்கள் மூலமாக திரட்டப்பட்டிருக்கிறது. இந்த நிதியின் மூலம் அரசுப்பள்ளிகள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப் பட்டிருக்கின்றன. அனைத்துப் பள்ளிகளும் திறன் வகுப்பு அறைகளையும் (smart class rooms), கணினி ஆய்வுக்கூடங்களையும் (computer labs) பெற்றிருக்கின்றன. இந்தவகையில் இதுவரை 310 பள்ளிகள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. சாலைகள், பாலங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுதல் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த கேஐஐஎப்பி மூலம்திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு கட்டப்பட்டு வரும் நிதி மற்றும் சமூகக் கட்டமைப்பு வசதிகள்கடந்த நான்காண்டுகளில் மேம்படுத்தப் பட்டிருப்பது அனைவரும் நன்கு காணக்கூடிய விதத்தில் வளர்ந்திருக்கின்றன. 

மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியளிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள நிலையில், மாநில அரசாங்கத்தின் கடன் வாங்கும் நிலைமை என்பது மிகவும் கடுமையாக மாறியுள்ள நிலையில், கேரளா அரசாங்கம் இத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டியிருந்தது. சிஏஜி, தன்னுடைய இறுதி அறிக்கையில், ஒரு பிரிவில், அந்நிய நாடுகளிலிருந்து பத்திரங்கள் மூலமாக நிதி ஏற்படுத்தியிருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று குறிப்பிட்டிருக்கிறது.கேஐஐஎப்பி-ஐக் கடந்த எட்டு மாத காலமாக ஆய்வு செய்து, கணக்குத்துறைத் தலைவர் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) எழுப்பிய 76 வினாக்களுக்கும் விவரமாகப் பதில்கள் அளித்தபின், இதன் திட்டங்கள் எதிலும் எவ்விதமான முறையற்ற செயலும் இல்லை என்று கண்டிருக்கிறது. கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அளித்த நான்கு பக்க வரைவு அறிக்கையில் கேஐஐஎப்பி கடன்கள் வாங்கியதில் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான அம்சம்எதுவும் இல்லை என்று தெள்ளத்தெளி வாக்கினார்.  மேலும் இதன் செயல்பாடுகள் தொடர்பாக எந்த நேரத்திலும் மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட வில்லை என்பதையும் கூறினார். அவர் மேலும்,கேஐஐஎப்பி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்றும், அது தற்போது நம்நாட்டில் உள்ள விதிகளின்படி கடன்கள் பெறுவதற்கு உரிமை பெற்றிருக்கிறது என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் - பாஜக கூட்டு
இடதுஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக, சிஏஜி அறிக்கையை உருவாக்கி யதற்கான முயற்சிகளில் காங்கிரஸ்-பாஜக ஆகிய இருகட்சிகளும் உடந்தையாக இருந்தன என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்த பேர்வழி, ஸ்வதேஷி ஜகரன் மஞ்ச் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின்கீழ் செயல்படும் அமைப்பின் தலைவராவார். இந்தமனுவில் இவர், இவ்வாறு வெளிநாடுகளி லிருந்து பத்திரங்கள் மூலமாக நிதிதிரட்டியது சட்டவிரோதமானது என்றும் அவ்வாறு திரட்டப்பட்ட நிதி முடக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவின் மீது இவருக்காக ஆஜரான வழக்கறிஞர், கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மாத்யு குழல்நாதன், என்பவராவார். இடது ஜனநாயக முன்னணியின் மக்கள் ஆதரவு திட்டங்களையும், வளர்ச்சிக்கான முயற்சிகளையும் சீர்குலைப்பதற்காக ஒன்றிணைவதில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே  எவ்விதக் கூச்சநாச்சமும் இல்லை.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும்இவர்களின் சதிகளை முறியடித்திடவும்இவற்றை மக்கள் முன் தோலுரித்துக்காட்டிட வும் தீர்மானித்திருக்கின்றன. நவம்பர் 16 அன்று, மாநிலம் முழுவதும் இவர்களின் நடவடிக்கைகளைத் தோலுரித்துக்காட்டும் விதத்தில் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இந்தக் கூட்டங்களில் மக்கள் ஆதரவுத் திட்டங்களைச் சீர்குலைத்திடும் மத்திய புலனாய்வு முகமைகளின் முயற்சிகளுக்குக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.கேரளாவில், உள்ளாட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் என்று மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக்கின்றன. இதற்காகஇடது ஜனநாயக முன்னணி சார்பாக அரசியல் அணிதிரட்டும் பணி முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இது, இத்தகைய சந்தர்ப்ப வாத மற்றும் சீர்குலைவு சக்திகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைந்திடும்.

நவம்பர் 18, 2020 தமிழில்: ச. வீரமணி
 

;