வினோத உருவில் குட்டி ஈன்ற ஆடு
வினோத உ கள்ளக்குறிச்சி, ஆக. 9- உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான ஆடொன்று, இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி சாதாரண ஆட்டுக்குட்டியைப் போன்று இருந்தாலும், இரண்டாவது குட்டி கரடியைப் போன்ற வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது. இந்த அசாதாரண நிகழ்வைக் காண கிராமவாசிகள் கூட்டமாக வந்து செல்கின்றனர். வினோத உருவில் ஆட்டுக்குட்டி பிறந்ததால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என சிலர் கூறுவதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது. இருபது ஆடுகளுக்கு மேல் வளர்த்து வரும் ஆனந்தன், இத்தகைய விசித்திரமான நிகழ்வை முன்பு கண்டதில்லை என்று கூறுகிறார்.