கிண்டி ஆளுநர் மாளிகையில் வனத்துறை அனுமதியின்றி 1.21லட்சம் சதுர அடி பரப்பளவில் சட்டவிரோதக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழி தெரியவந்துள்ளது.
கிண்டி தேசியப் பூங்காவானது 270.57 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியாகும். 1978ம் ஆண்டில்தான் இந்த பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்தக் காப்புக் காட்டிலிருந்து 1961ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி. அமைப்பதற்காக 154 ஹெக்டேர் பகுதியும், 1970ம் ஆண்டு குருநானக் கல்லூரிக்கு 8.09 ஹெக்டேர் பகுதியும், 1977ம் ஆண்டு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2.51 ஹெக்டேர் பகுதியும் நிலப்பயன்பாடு வகைமாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள ராஜ்பவனுக்கு மேற்கூறியபடி எந்தவொரு நிலப்பயன்பாடு மாற்றமும் நடைபெறவில்லை. இப்போதும் அவ்விடம் கிண்டி தேசியப் பூங்காவில் ஒரு பகுதியாகவே தொடர்வது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதியில் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சாராத திட்டங்களை மேற்கொள்ள வனப் பாதுகாப்புச் சட்டம் 1980 மற்றும் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை மற்றும் ராஜ்பவனில் கட்டப்பட்ட எந்தவொரு கட்டிடத்திற்கும் மேற்கூறிய அனுமதிகள் பெறப்படவில்லை.
இந்தச் சட்டங்கள் இயற்றப்படும் முன்பாகவே அதாவது 1820ம் ஆண்டிலேயே ஆளுநர் மாளிகை கட்டப்பட்டதால் இச்சட்டங்கள் பொருந்தாது எனக் கூறினாலும் இச்சட்டங்கள் இயற்றிய பின்னர் குறிப்பாக 1998 முதல் 2006 வரையில் பல்வேறு ஆண்டுகளில் மொத்தமாக 1.21 லட்சம் சதுர அடி நிலங்களில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆளுநர் மாளிகை பகுதியில் 1980 முதல் தற்போது வரை 6 புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொண்டு இருப்பதாக ஆளுநர் மாளிகையே பதில் அளித்துள்ளது. கடைசியாக 2013ம் ஆண்டு ஆளுநர் மாளிகை ஊழியர் குடியிருப்பின் ஏ முதல் எல் வரையிலான 12 தொகுப்புகள் 78 ஆயிரத்து 217 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் 6 கட்டுமானங்களும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு ஊழியர் குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக காப்புக் காட்டின் குறிப்பிட்ட பகுதியை சாதாரண வனப்பகுதியாக வகை மாற்றுவது செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் அப்போதைய அதிகாரிகள், மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினாலும் இதில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கட்டுமானம் மேற்கொள்ளப்படும் இடம் அல்லது ஆளுநர் மாளிகையின் கட்டுப்பாட்டில் உள்ள 146 ஏக்கர் காப்புக் காடு வனப்பரப்பையும் சாதாரண வனப்பரப்பாக வகை மாற்றும் செய்வதற்கான பரிந்துரையை வழங்கும்படி தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மாளிகையிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான பரிந்துரை வழங்கப்படாததால் காப்புக் காடாகவே நீடிக்கும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது விதிமீறல் என்று குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கிண்டி காப்புக் காடு வனப்பரப்பு 1978ம் ஆண்டுக்கு பின் இதுவரை எந்த வகை மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இக்கட்டிடங்கள் எதற்குமே வனத்துறை அனுமதியும் தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியும் பெறப்படவில்லை.
மேற்கூறிய கட்டுமானப் பணிகளாலும், அண்மையில் ராஜ்பவனில் இயற்கையாக அமைந்த புல்வெளிகள் அகற்றப்பட்டு அப்பகுதிக்கு அந்நியமான செடிகள் நடப்பட்டது உள்ளிட்ட காரணங்களாலும் ராஜ்பவனில் வாழும் வெளிமான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2017 – 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில் 10 வெளிமான்களும், 14 மான்களும் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஏப்ரல் வரையிலான காலத்தில் 16 வெளிமான்களும் 8 மான்களும் ராஜ்பவனில் உயிரிழந்துள்ளன. 2021ம் ஆண்டிற்குப் பின்னர் மிக அதிக எண்ணிக்கையில் ராஜ்பவனில் மான்கள் உயிரிழந்து வருவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
ஆளுநர் மாளிகையிலேயே இதுபோன்ற விதிமீறல் நடைபெறுவது தவறான முன்னுதாரணமாகி உள்ளது.