சீனாவின் உகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. மராட்டியம், குஜராத், டெல்லி, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், தொற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 'தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியான ஆய்வு கட்டுரை ஒன்றில் கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர், மனநல பிரச்சினைக்கு ஆளாகிறார். இது வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவதுதான். எனினும் இந்த பிரச்சினை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோர், தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். ஆனால் , மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. அதனால் அவர்கள், 'வீடியோ' மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது என்று அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.