இனாம் நிலம் உழுபவர் உரிமையே!
பண்டைய மற்றும் மத்திய கால இந்தியாவிலும் தமிழக நிலப்பரப்பிலும் அரசாண்ட முகலாய மன்னர்கள், பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் காலங்களிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் தங்களுக்குச் சேவை செய்தவர்களுக்குத் தானமாகக் கொடுத்த நிலங்கள்தான் இனாம் நிலம் என்று அழைக்கப்படுகின்றன. அரச குடும்பத்தினர் மற்றும் ஆட்சி யாளர்களுக்குத் தேவையான அனைத்து விதமான உபசரிப்புகளையும் செய்தவர்கள், புகழ்ந்து பாடிய புலவர் பெருமக்கள், நடித்தும் இசைத்தும் மகிழ்வித்த கலைஞர்கள், நோயிலிருந்து காப்பாற்றிய மருத்துவர்கள், மிகச்சிறந்த போர்வீரர்கள் மற்றும் மதநிறுவனங்கள் இப்படிப் பலருக்கு ஆட்சியாளர்கள் முன்வந்து கொடுத்த பரிசுப் பொருட்களில் இனாம் நிலங்களும் இருந்தன. அரபி, பாரசீகத்திலிருந்து இனாம் என்ற சொல் வந்துள்ளது. பல ஜாகீர்தார்கள், ஜமீன்தார்கள் இப்படித்தான் உருவாக்கப் பட்டனர். மைனர் இனாம் நிலம் என்பது ஒரு கிராமத்தில் ஒரு பகுதியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட அளவோ நிலம் ஒருவருக்குத் தானமாகத் தருவது. மேஜர் இனாம் நிலம் என்பது ஒரு கிராமத்தை முழுமையாக ஒருவருக்குக் கொடையாக அளிப்பது. விவசாயிகளின் துயரங்கள் இனாம் நிலங்களில் விவசாயிகள் குத்தகைக்குச் சாகுபடி செய்தனர். இனாம்தார்கள் சாகுபடி செய்த குத்தகை விவசாயிகளிடத்தில் தங்கள் இஷ்டத்திற்கு வாடகை வசூல் செய்தார்கள். ஏராளமான விவசாயிகள் இனாம்தார்கள் கேட்கும் வாடகைக் குத்தகையைத் தர முடியாமல் நிலத்தை விட்டுத் தாங்களாகவே வெளியேறினார்கள். பலர் தரவேண்டிய குத்தகை நிலுவைக்குத் தங்களிடமிருந்த மிச்சச் சொச்ச நிலத்தையும் கால்நடை களையும் இழந்தனர். இன்னும் சிலர் இனாம்தார்களிடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்தனர். 1871-1872ஆம் ஆண்டு முதல் விடுதலை இந்தியா வரை இனாம் நிலங்களில் சாகுபடி செய்த விவசாயிகளிடம் குத்தகை, வாடகை நிலுவை கோரியும், விவசாயிகளை நிலத்தி லிருந்து வெளியேற்றவும் ஏராளமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு தற்போது வரை நிலுவையில் இருந்துவருகின்றன. இனாம் ஒழிப்புச் சட்டங்கள் இனாம் நிலங்களுக்கான வரி விலக்கானது நில உரிமை முறைகள் மற்றும் சமத்துவ அரசியலுக்கு முரணானதாகக் கருதப்பட்டது. மேலும் இனாம் நிலங்களில் சாகுபடி செய்த விவசாயிகள் போராட்டம் தலை தூக்கியது. விவசாயிகள் தாங்கள் சந்தித்த கொடுமைகள், அதீதமான வாடகை, நில வெளியேற்றம் இவற்றின் காரணமாக நாடு முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். முக்கிய இனாம் ஒழிப்புச் சட்டங்கள் • 1953 பம்பாய் தனிநபர் இனாம் ஒழிப்புச் சட்டம் • கர்நாடகா தனிநபர் இனாம் ஒழிப்புச் சட்டம் 1955 • ஹைதராபாத் இனாம் ஒழிப்புச் சட்டம் 1977 • தமிழ்நாடு இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டம் 26/1963 1956ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் நில உரிமைச்சட்டம் இயற்றப்பட்டது. இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டம் ஆறு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் ஒரு பகுதி இனாம் நிலங்கள் நிலத்தை நேரடியாக உழவடை செய்த விவசாயிகளுக்குப் பட்டா தரப்பட்டது. தற்போதைய நிலைமை அரசு அதிகாரிகள் இனாம் ஒழிப்புச் சட்டப்படி நிலத்தைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பெரும்பாலும் பட்டா வழங்கவில்லை. இனாம் ஒழிப்புச் சட்டம், நில உச்சவரம்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே ஜமீன்தார்கள், நிலவுடை யாளர்கள், இனாம்தார்கள் தங்கள் கைவசம் இருந்த நிலங்கள் அனைத்தையும் அறக்கட்டளைகள் பெயரில் மாற்றம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இனாம் நிலங்கள் பரவலாகக் காணப்படுகின்றன: - புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி: மதநிறுவனங்கள், மடங்களுக்கு அதிகம் - வேலூர், சேலம், தர்மபுரி: தனிநபர்கள் மற்றும் மடங்களுக்கு அளிக்கப்பட்டது திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், இனாம் சமயபுரம், இனாம் கல்பாளையம் ஆகிய கிராமங்கள் இப்போதும் இனாம் என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படுகின்றன. மணப்பாறை வட்டத்தில் சூளியாப்பட்டி, கீழையூர், சம்பட்டி, உசிலம்பட்டி ஆகிய கிராமங்களில் இனாம் நிலங்கள் ஒப்படை செய்யப்பட்ட தரவுகள் 1963 இனாம் ஒழிப்புச் சட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முக்கிய புள்ளிவிவரங்கள் புதுக்கோட்டை மாவட்டம் • ஆலங்குடி, குளத்தூர், திருமயம் வட்டங்களில் 198 கிராமங்களில் 1,33,120 ஏக்கர் இனாம் நிலம் • குளத்தூர் வட்டம் நல்லூர் சத்திரம் பெயரில் மட்டும் 1,500 ஏக்கர் • ஆவுடையார் கோயிலுக்கு மட்டும் 8 வருவாய் கிராமங்களில் 27,000 ஏக்கர் கிருஷ்ணகிரி மாவட்டம் • ஓசூர் வட்டத்தில் பைமாசி நிலம் என்ற பெயரில் சென்னசந்தரம், மாரசந்திரம், இளையசந்திரம், திம்மசந்திரம், உளியாலம், செட்டிபள்ளி, முகலூர் ஆகிய ஊராட்சிகளில் 2,300 ஏக்கர் பிற முக்கிய பகுதிகள் • தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இனாம் ஆசூர் • திருநெல்வேலி மாவட்டம் இனாம் கோவில்பட்டி • தூத்துக்குடி மாவட்டம் இனாம் அருணாசலபுரம் • திருவண்ணாமலை மாவட்டம் இனாம் கரியாண்டல் • கரூர் மாவட்டம் இனாம் கரூர் பகுதியில் இனாம் நிலம் அவசரத் தேவைகள் பல பகுதிகளில் இன்னும் இனாம் நிலங்கள் “சர்வே செய்யப்படாத நிலங் களாக” இருப்பதால் உரிமைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இன்றைக்கும் இனாம்தார்கள் பெயரிலேயே வருவாய்க் கணக்குகளில் நில ஆவணங்கள் உள்ளன. நிலத்தை உழவடை செய்த விவசாயிகள் பெயரில் முறையான பட்டா மாற்றம் உள்ளிட்ட வருவாய் பதிவேடு களில் மாற்றம் எதுவும் நடைபெறாமல் தொடர்கின்றன. 1963 இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டத்தின்படி பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களைக் கண்டறிந்து, அவற்றில் நேரடியாக உழவடை செய்யும் விவசாயிகளுக்குப் பட்டா வழங்க தமிழ்நாடு அரசு தனி ஆணையம் உருவாக்க வேண்டும். பட்டா கோரி விண்ணப்பம் செய்யும் விவசாயிகளுக்கு 3 மாத இடை வெளியில் பட்டா வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.