tamilnadu

img

கோவை பேரூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது மதில்சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி!

கோவை பேரூர் பட்டீசுவரர் கோவில் அருகே கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார்.  

கோவை பேரூர் பட்டீசுவரர் கோவில் பின்புறம் உள்ள வடக்கு வீதியில் இருந்து நொய்யல் ஆறு வரை பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 200 மீட்டர் தொலைவிற்குக் குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் குழியை மூடும் பணிகள் நடைபெற்றது.  

இதற்காக இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. அப்போது அங்குத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். குழியை மூட ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மண்ணை எடுத்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பழைய  திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான இடர்பாடுகளில் தொழிலாளி வேல்முருகன் சிக்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பேரூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த பேரூர் போலீஸார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இறந்த நிலையில்  வேல்முருகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் குழிகளை மூடும் பணி ஒருவர் மட்டும் ஈடுபட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.