கோவையில் போதைப்பொருள் தடவிய ஸ்டாம்புகளை விற்பனை செய்த 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் சாலை வெள்ளக்கிணறு அருகே போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த மூவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவையைச் சேர்ந்த முகமத் தபரீஸ், பிரதீப் ராஜ், விவியின் ஆனந்தகுமார் எனத் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மூவரும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, அதிக விலையில் போதை மருந்து ஸ்டாம்புகளை விற்றது விசாரணையில் உறுதியானது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.