உலகக்கோப்பை தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் விண்டீஸ் - வங்கதேசம் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்தில் களமிறங்கியதால் தொடக்க ஓவர் முதலே ஆட்டம் அனல் பறந்தது. முதலில் களமிறங்கிய விண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஈவிரக்கமில்லாமல் விண்டீஸ் அணியின் பந்துவீச்சை பந்தாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் விண்டீஸ் அணி நிர்ணயித்த (322 ரன்கள்) கடினமான இலக்கு என்பதை மறந்த வங்கதேசம் 8.3 ஓவர்களை மீதம் வைத்து சேஸிங்கில் சாதனை படைத்தது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 52 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் விளாசப்பட்டதால் போட்டி நடைபெற்ற டவுன்டன் மைதானமே குலுங்கும் அளவிற்கு இரு அணிகளும் அதிரடியாக விளையாடி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.