tamilnadu

img

குப்பைக்கிடங்கான மாநகராட்சி - சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

கோவை, ஏப்.10-குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டுள்ள கோவை மாநகராட்சியில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுப்பேன் என மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதியளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார். இவர் புதனன்று வடவள்ளி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வடவள்ளியில் துவங்கிய வாக்கு சேகரிப்பு கல்வீரம்பாளையம், மகாராணி அவன்யூ, மருதமலை நாவலூர் பிரிவு வழியாக கணுவாயில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், அதிமுக அரசு தோல்வி பயத்தின் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டு காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் கோவை மாநகராட்சி முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. எனவே, இந்த குப்பைகளை அகற்றவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். மேலும், மருதமலையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம் அமைக்கவும், இப்பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். இதேபோல், பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏற்கனவே நான் பதவியில் இருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக பெற்று தந்துள்ளேன்.


மீதமுள்ள தொகையை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன். இதற்காக பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடுவேன். ஆகவே, மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு சுத்தியல், அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.இந்தப் பிரச்சார பயணத்தில் திமுக பகுதி செயலாளர் சண்முகசுந்தரம், தொகுதி பொறுப்பாளர் குப்புசாமி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் அறிவரசு, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கார்த்திக், மதிமுக பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் ஜேம்ஸ், தொகுதி பொறுப்பாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணைச்செயலாளர் சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, இந்த பிரச்சாரத்தின்போது வேட்பாளர் பி.ஆர்.நடராஜக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், சட்டக்கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு மாலை அணிவித்தும், துண்டு அணிவித்தும் தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.