தோழர் கோ.வீரய்யன் சித்தாடி கிராமத்தில் கோவிந்தசாமி-முத்துலெட்சுமி தம்பதியருக்கு 1932-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம்தேதி பிறந்தார். இக் கிராமத்திலுள்ள திண்ணை பள்ளிக்கூடத்தில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். ஆனால் அவரது சொந்த முயற்சியின் காரணமாக பல தத்துவார்த்த மற்றும் வரலாற்று புத்தகங்கள் படித்து எண்ணற்ற கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதினார்.சிறு குத்தகை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பண்ணை வேலைக்கும் சென்றார். இளம் வயதிலேயே சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்த அவர் கம்யூனிஸ்ட் இயக்க ஏடுகளை படித்ததன் காரணமாக கம்யூனிஸ்ட்கட்சிக்கு ஈர்க்கப்பட்டார். கட்சியின் மீது கொடிய அடக்குமுறை ஏவப்பட்டிருந்த காலத்தில் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்று சிறை சென்றவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் உருவாக்கிய தலைவர்களில் தோழர் கோ.வீரய்யனும் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய இணைப்புக்குழுவில் இவரும் ஒருவர்.விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்று பல மாதங்கள் சிறையிலிருந்துள்ளார். அவசரநிலைக் காலம் உட்பட பல்வேறு காலங்களில் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியவர்.தோழர் கோ.வீரய்யன் கட்சியின் இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் கட்சியின்மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளராகவும் செயல்பட்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளராகவும், விவசாயிகள் சங்க மத்தியக்குழு உறுப்பினராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தில், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளராகவும் மாநிலப் பொதுச் செயலாளராகவும், மாநிலத் தலைவராகவும் பல ஆண்டுகாலம் திறம்பட பணியாற்றியவர். அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். வெண்மணி கொடூரம் நடந்தபோது ஒன்றுபட்ட தஞ்சாவூர்மாவட்டத்தில் கட்சியையும் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தையும் பாதுகாத்ததில் தோழர் கோ.வீரய்யனுக்கு முக்கியப்பங்குண்டு.
தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகுறித்தும் பாசனப் பிரச்சனைகள் குறித்தும் மிகத் தெளிவாகஅறிந்த தலைவர்களில் கோ.வீரய்யனும் ஒருவர். காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வருகை தந்தபோது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை பல்லாயிரக்கணக்கில் திரட்டி முறையிட வைத்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு.கோ.வீரய்யன் 1984 மற்றும் 1989-ஆண்டுகளில் நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றினார்.தமிழக அரசு அமைத்த வேளாண் உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டார். மேலும், விவசாயத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட குறைந்தபட்சக் கூலி நிர்ணயக்குழுவிலும் பணியாற்றினார்.சங்கம் படைத்த சாதனை, வெண்மணித் தீ , விவசாய சங்க வீர வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை “செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்” என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்.
1988-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவில் இடம்பெற்று சோவியத் யூனியன் சென்று வந்துள்ளார்.60 ஆண்டுகால கட்சி வாழ்க்கைக்கு சொந்தக்காரரான இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர ஊழியராக பணியாற்றியவர். 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் மறைந்தார்.
- பெரணமல்லூர் சேகரன்