கடலூர், ஏப். 4-
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நீட் என்ற மருத்துவ நுழைவுத் தேர்வினை எழுத வேண்டியுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவப் படிப்பு படிக்க முடியும். எனவே, இத்தேர்வினை எழுதுவதற்கு அரசு, உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசால் இலவசமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிற்சியளிக்க வல்லத்துறை, லால்பேட்டை, முட்டம், கவரப்பட்டு பேர்பெரியான் குப்பம், மேல்பட்டாம்பாக்கம், புவனகிரி, வடலூர், கம்மாபுரம், பெண்ணாடம், தொழுதூர், நல்லூர் ஆகிய அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் பயிற்சியளித்திட கடலூர் புனித வளனார் பள்ளி, விருத்தாசலம் அரசு மகளிர் பள்ளி ஆகியவை பயிற்சி மையங்களாக உள்ளன.தொடுவானம் என்ற திட்டத்தின் கீழ் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 482 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.