tamilnadu

img

விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் ஜாமீனில் விடுதலை - கடலூரில் வரவேற்பு....

கடலூர்;
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு ஆதரவாக கடலூரில் போராட்டத்தில்ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட  மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் டிசம்பர் 16 புதன்கிழமையன்று   ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதியன்று கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். தில்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற இந்த போராட்டத்தை தடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, இரும்புதடுப்புகள் அமைத்திருந்தனர். அமைதியான முறையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆத்திரம் மூட்டிய  காவல்துறையினர் கயிறு கட்டியும், இரும்பு தடுப்பாலும் தடுத்தனர். இதனால்  சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது..

 தடுப்புகளை போராட்டக்காரர்கள் மீது போலீசார் தள்ளியதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இவர்களை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத போலீசார் அவர்கள் மீதே காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தவும்,  போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ள தோழர்களை குறிவைத்து ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பொய் வழக்கு புனைந்து  சிறையில் அடைத்தனர்.விவசாயிகளுக்காக போராடியவர்கள் மீது பெண்கள் மீதான வன்முறை செய்ததாகவும், போலீசாருக்கே கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உயரதிகாரிகளின் ஆணைக்கிணங்க  பொய்யாக வழக்கு பதியப்பட்டது. 

 சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், கடலூர் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், வாலிபர் சங்க நகரச் செயலாளர் டி.எஸ்.தமிழ்மணி, நகரக்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோருக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தும் காவல்துறையினர் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டு அங்கேயும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்று  16நாட்களுக்குப் பிறகு புதன்கிழமையன்று விடுதலை ஆகினர். கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கறி ஞர்கள் லெனின், சுரேஷ்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்,அபிமன்யு ஆகியோர் ஆஜராகி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தனர்.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வந்த தோழர்களுக்கு சிறை வாசலில்  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச்செயலாளர் ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் செயலாளர் வாஞ்சிநாதன், மாணவர் சங்க செயலாளர் குமரவேல், மற்றும் சங்கமேஸ்வரன்  உள்ளிட்டவர்கள் வரவேற்பளித்தனர். அதேபோன்று கடலூர் நகரத்தில் சிஐடியு அலுவலகத்திற்கு முன்பு சிறை சென்ற தோழர்களை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி யும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், பி.கருப்பையன், குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் வெங்கடேசன்,  டி. புருஷோத்தமன், கடலூர் நகரக்குழு உறுப்பினர்கள் பால்கி, திருமுருகன், ஸ்டாலின், பக்கிரான், ஆனந்து, கருணாகரன்,   உள்ளிட்டோர் கலந்துகொண்டு வரவேற்றனர்.