tamilnadu

img

எங்களுக்கு தேவை அட்வைஸ் அல்ல... அங்கீகாரம்

பெண்கள் முன்னேற்றம் இன்று பல தளங்களில் முன்னேறி வருகிறது என்னும் கூற்று பெரும்பாலும் தற்போது எல்லோராலும் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு பெரும்பாலான காரணம் தாங்கள் கண்ணில் பார்க்க்க் கூடிய இடங்களில் தங்களுக்குத் தெரிந்த பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேறுவதைக் கண்டு உணருவதால் ஏற்படும் போலியான பிம்பமாகும். அதன் ஒரு வடிவமே குடும்ப சூழலின் காரணமாக ஆட்டோ, டாக்ஸி ஓட்டிவரும் பெண்களை நாட்டின் மிகப்பெரிய முன்னேற்றமாக்க் காண்பது. அந்நிலைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்ட நிலையைப்பற்றிக் கவலைப்படாமல் மாறாக அதனையே நாட்டின் வளர்ச்சி என சாடி பாராட்டுவது முட்டாள்தனத்தின் உச்சமே அன்றி வேறில்லை. இதைத்தாண்டி இந்தியாவில் பணிக்குச்செல்லும் பெண்களைப் பொருத்தவரை இந்தியாவில் ஓரளவு பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 23.6 சதத்தினர் 2018-2020 ஆம் ஆண்டுகளில் உள்ளனர். இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 26% மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்மை ஐந்து வேலை இடங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதுவே இவ்வாறு இருக்கையில் உள்ளூரில் தனது குடும்பசூழலின் காரணமாக ஆட்டோ டாக்ஸி ஓட்டி குடும்பத்தைக் காத்துவரும் பெண்களின் நிலை இன்னும் மோசமாகும். அவர்களில் சிலரை கோவையில் சந்தித்தபோது..

கோபப்படக் கூட உரிமையில்லை
டாக்ஸி ஓட்டிவரும் மஞ்சுளாதேவி கூறுகையில், குழந்தை வயிற்றில் இருப்பது தெரியவந்த நிலையில் கணவனால் கைவிடப்பட்டேன். அப்போதிருந்து பிறந்த வீட்டிலேயே தான் இருந்து வருகிறேன். ஆரம்பத்தில் தையல்வேலை செய்து வந்து பின்னர் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இந்த வேலைகளை நான் செய்து வரும் அளவிற்கு பேசவெல்லாம் எனக்கு வராது. என்னதான் என்னையும் என் குழந்தைதையும் என் பெற்றோரும் தம்பியும் கவனித்து வந்தாலும் ஒரு சலிப்பையும் காயப்படுத்தும் வார்த்தைகளையும் அவ்வப்போது எனக்கு உணர்த்தி வருகின்றனர். ஒரு பெண் குழந்தையை நான் வைத்துள்ளதால் வீட்டிலிருந்து வெளியேவர எனக்கு உண்மையில் தைரியம் இல்லை. அடித்தாலும் அசிங்கப்படுத்தினாலும் வீட்டிலேயே இருந்தாக வேண்டிய நிலையிலேயே நான் உள்ளேன். டாக்ஸி ஓட்ட ஆரம்பித்த புதிதில் ஒரு பெண் வாடிக்கையாளராலேயே முதன்முதலில் அசிங்கப்படுத்தப்பட்டேன். ஆக, வீட்டில் கோவத்தைக் காட்டினால் வீட்டை விட்டுவிரப்படுவேன் எனவும் வேலையில் கோவத்தைக் காட்டினால் வேலையை விட்டு நிறுத்தப்படுவேன் எனவும் பயந்து கோவம் கொள்ளும் உரிமையையே இன்று இழந்து நிற்கிறேன். இதுவே என் நிலைமை, என்கிறார் மஞ்சுளாதேவி.

பலனளிக்காத முன்னேற்றம்
16 வருடங்களாக ஆட்டோ ஓட்டிவரும் ஜெயந்தி கூறுகையில், 5 பேர் கொண்ட குடும்பத்தை தனியாக காப்பாற்றி வரும் நான் ஆரம்பத்தில் இதனைச்செய்ய ஆரம்பித்தபோது பல கேளிகிண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன். குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டுமென்ற திடத்தால் பின்னர் அனைத்தையும் புறந்தள்ளி தைரியமாக ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். சாலை வாடகை மற்றும் கைகாட்டி ஏறும் வாடகை எப்போதாவது வந்தாலும், பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடும் வாடகையையே நம்பி வருமானம் பார்த்து வந்தேன். தற்போது கொரோனா ஊரடங்கால் அதுவும் நின்று விட்டது. நலச்சங்கத்தில் என்ன கணக்கின் படி எல்லாருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்றே தெரியவில்லை. நலச்சங்கத்தில் பல வருடங்களாக நான் உறுப்பினராக இருந்தும் எனக்குப்பின்னால் பதிவு செய்தவர்களுக்கு கிடைத்தது, ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து எங்கள் பகுதியில் சிஐடியு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல வருடங்களாக ஒரு பெண்ணாக நான் முன்னேறி வந்தும் இக்கொரோனா ஊரடங்கினாலும் அரசின் முறையற்ற நடவடிக்கையாலும் இப்போது திக்கற்று நிற்கிறேன், என்கிறார் ஜெயந்தி.

அறிவுரையல்ல, அங்கீகாரமே தேவை
பி.ஏ படித்த 23 வயதுள்ள டாக்ஸி ஓட்டும் திருநங்கையான சுசித்ரா கூறுகையில், பெற்றோரிடமிருந்து வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டேன். பின்னர் நான் திருநங்கையானவுடன் வீட்டிலிருந்து தனியாக வந்து வேலை தேட ஆரம்பித்தபோது யாரும் வேலை கொடுக்கவில்லை. பின்னர் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தபோது சமூகத்தில் பல சந்தர்ப்பங்களில் இழிவுப்படுத்தப்பட்டேன். ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில் பேருந்து நிலையத்தில் வாடகைக்கு நின்று கொண்டிருந்த போது அங்க திடீரென வந்த காவல்துறையினர் என்னைக் கண்டவுடன், எதற்காக நிற்கிறேன் என கூட கேட்காமல் ஏன் இங்கு நிற்கிறாய் என அடிக்க ஆரம்பித்து விட்டனர். அதையெல்லாம் தாண்டி எனக்கென ஒரு மரியாதையை உருவாக்க பலகாலம் பிடித்தது. பின்னர் என்னைப்பிடித்து ஒருவர் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தையுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். என்னதான் அரசு என்போன்றோரை அங்கீகரிப்பதாக கூறிக் கொண்டாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. உதாரணத்திற்கு எனக்கான சில உடல் உபாதைகளுக்கு அதற்கென சில சிறப்பு மருத்துவர்கள் தேவை. என் வசதிக்கு நான் அரசு மருத்துவமனைக்குத் தான் செல்ல முடியும். ஆனால் அங்கு சென்றால் அதெல்லாம் இங்கு இல்லை எனக்கூறி தனியார் மருத்துவமனையை நாடச்சொல்கின்றனர். இதுபோல் பல்வேறு இடங்களில் நடக்கிறது. எனவே அரசும் சமூகமும் அறிவுரை வழங்கும் அளவிற்கு எங்களுக்கு அங்கீகாரமும் ஆதரவும் தர வேண்டும் என்றார்.

படிப்பு மட்டுமே முன்னேற்றம்
கர்நாடகத்தைப் பூர்வீகமாக்கொண்ட பேபிகமலா கூறுகையில், என் அத்தையை உடனடியாக மருத்துவமனை அழைத்துச்செல்ல வேண்டுமென்ற சூழ்நிலையில் என் அத்தையை ஏற்றிக்கொண்டு முதன்முதலில் என் பதினைந்தாவது வயதில் ஆட்டோ ஓட்டிச் சென்றேன். என் அத்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டது. அப்போதிருந்தே எனக்கு ஆட்டோ ஓட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அந்த ஊரில் பெண்கள் ஆட்டோ ஓட்டுவது என்பதையெல்லாம் ஏற்பாக பார்க்கக்கூடிய மனிதர்கள் இல்லை. பின்னர் திருமணமாகி நான் இங்கே வந்த பிறகு ஒரு பெண்குழந்தை இருந்த நிலையில் என் கணவர் இறந்து விட்டார். என் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்ற சூழலில் நான் ஆட்டோ ஓட்டுவதைத் தொழிலாகக் ஏற்றுக்கொண்டு ஆரம்பித்து கடந்த பதினேழு வருடங்களாக ஓட்டி வருகிறேன். உலகம் நினைப்பதுபோல் ஆட்டோ ஓட்டுவது பெரிய வருமானம் தரும் என்பதெல்லாம் உண்மையல்ல. அதிலும் பெண்கள் ஓட்டும்போது மிகப்பெரும் சவாலுக்கு ஆளாக்கப்படுவோம். அரசோ உறவுகளோ அட்வைஸ் பண்ணும் அளவிற்கு உதவுவதெல்லாம் இல்லை. என்மகள் பொறியியல் படித்து தற்போது நானும் அவளும் கௌரவமாக வாழ்ந்து வருவதற்குக் காரணம் என் தைரியமான முடிவைத் தாண்டி வேறெவரும் இல்லை. என்னைப்பொறுத்த வரை பெண்கள் ஆட்டோ ஓட்டுவதல்ல, ஆளுமையோடு படித்து உயர்தலே உண்மையான பெண்கள் முன்னேற்றமாக இருக்க முடியும் என்றார்.

மதில்மேல் பூனை வாழ்வு
ஒரு தொழிலில் பணத்தைப்போட்டு மிகப்பெரிய அளவில் என் கணவர் நஷ்டமடைந்ததால் நான்கு சக்கர பயிற்றுவிப்பாளராக முதன்முதலில் வேலைக்குச் சென்றேன், என ஆரம்பிக்கிறார் ஒரு வருடமாக டாக்ஸி ஓட்டி வரும் சகுந்தலா. பின்னர், அங்கு அவர்களே இந்திய ஓட்டுநர் வள பயிற்சி படிப்பதற்காக என்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிங்க் டாக்ஸி ஆரம்பிப்பது தெரியவந்ததும் இங்கு வந்து ஒரு நாளில் 16 மணிநேரம் விடாமல் வேலை பார்த்து வந்தேன். நியாயமான சம்பளமும் இருந்ததால் வாழ்க்கையை கடந்துவிடலாம் என ஓரளவு நம்பிக்கை இருந்தது. கொரோனா ஊரடங்கால் மொத்தமாய் பாதிக்கப்பட்டு தற்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். என் கணவர் வாங்கும் சம்பளம் வீட்டு வடகைக்கே சரியாக உள்ளது. மேலும் உணவிற்கே வழியில்லாத நிலையால் என் இரு குழந்தைகளையும் என் அக்கா வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். அரசோ அரசியல் கட்சிகளோ எதுவும் எங்களுக்கு இந்நிலையில் உதவவில்லை. குறிப்பாக என் கணவர் ஓட்டுபோட ஆரம்பித்த காலத்திலிருந்தே அதிமுகவிற்கு உழைத்தார். ஆனார் தற்போது அவர்களும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக நடுத்தர மக்களின் வாழ்வு என்பதே மதில் மேல் பூனை வாழ்க்கைதான். எங்கு எப்போது விழுவோம் என சொல்லவே முடியாது. குறிப்பாக குடும்பத்தை எடுத்து நடத்தும் நிலைமையெல்லாம் எப்பெண்ணுக்கும் வாய்க்கக் கூடாது, எனக் குமுறுகிறார் சகுந்தலா.

பாரபட்சத்திற்கு பாலினம் கிடையாது
பாக்யலட்சுமி கூறுகையில், திருமணாகி நான்கைந்து வருடம் கழித்து ஆட்டோ ஓட்டச் சென்றேன். ஆரம்பத்தில் ஆட்டோ வாங்க உதவிய பிற ஆண் ஆட்டோ நண்பர்கள் பின்னர் அவர்களே என்னைப்போட்டியாக நினைத்து ஒதுக்கி விட்டார்கள். எனக்கு அப்போது கூச்சசுபாவமும் அதிகமிருந்ததால் பூஜைபோட்ட நாளிலிருந்து ஆட்டோவை வீட்டிலேயே வைத்திருந்தேன். பின்னர் ஆட்டோ நிறுத்தத்திற்குக் ஆட்டோவை எடுத்துவரவே எனக்கு தனி தைரியம் தேவைப்பட்டது. அங்கே சென்றாலும் நிறுத்தத்தில் நிற்காமல் பயந்து அருகிலுள்ள தேநீர்கடையில் தான் நிற்பேன். அதையெல்லாம் தாண்டிவந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து தற்போது 23 வருடங்கள் ஆகி விட்டன. ஆக ஆணோ பெண்ணோ, தனக்குப் போட்டியென வந்தால் எவராயினும் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதே நான் வாழ்வில் உணர்ந்த பாடம். தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால் இதுவரை இல்லாத அளவு நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் ஒன்றுமில்லாமல் முன்னேறிய என் கடந்த கால அனுபவத்தையும் உத்வேகத்தையும் கொண்டு இக்கடுமையான நாட்களை ஓட்டி வருகிறேன் என்றார்.

புரட்சி எல்லாம் அல்ல
கடந்த ஆறு மாதமாக டாக்ஸி ஓட்டிவரும் முத்துலெட்சுமி கூறுகையில், இதற்கு முன் 7 வருடங்களாக ஒரு டெக்ஸ்டைல் சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வேலை பார்த்து வந்தேன். அங்கு கொடுத்த 8 ஆயிரம் வருமானம் சுத்தமாக பத்தாததால், வருவாய் மற்றும் ஆர்வம் காரணமாக டாக்ஸி ஓட்ட வந்தேன். தற்போது தான் ஓரளவு வாழ்வில் வெளிச்சம் வந்ததுபோல் இருந்தது, ஆனால் அதையும் கொரோனா பறித்து விட்டது. இவ்விஷயத்தில் அரசாங்கத்தைப் பற்றி கூற வேண்டுமேனில், அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் நகரத்தில் வாழும் குடும்பத்திற்கு எவ்வாறு சரியாக இருக்கும் ? ஜன்தன் கணக்கு வைத்திருந்தும் முதல் தவணைக்கான 500 ரூபாய் இன்னும் எனக்கு வரவில்லை. தனித்து வாழும் அனைத்து பெண்களையும் அரசு கண்டுபிடிப்பது என்பது சாராதணமான விஷயம் அல்ல தான். இருப்பினும் ஒவ்வொரு துறையிலும் உள்ள பதிவு செய்து வேலை பார்க்கும் பெண்களை கண்டுபிடிப்பது என்பது எளிதான விஷயம் தான். ஆனால் அதை அரசு சரியாக செய்ததாகத் தெரியவில்லை. உண்மையில் நாங்கள் புரட்சி செய்யவெல்லாம் இவ்வேலைக்கு வரவில்லை. குடும்பநிலைமையின் காரணமாகத்தான் வருகிறோம் என்றார்.

இந்தியாவின் பெண்களைப் பொறுத்தவரை, 2017 ஆம் ஆண்டானது இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் (FLFPR) சுதந்திரத்திற்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்த ஆண்டு. உலக வங்கி (2017) குறிப்பிடுகையில், உலகளவில் மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை இந்தியா கொண்டுள்ளது. தொடர்ச்சியாக தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு கடந்த ஏழு தசாப்தங்களாக நிலையான சரிவைக் காட்டுகிறது. 1972-73 ஆம் ஆண்டில் FLFPR 33% ஆக இருந்தது மற்றும் 1999-00 வரை 26% ஐத் தொட்டது. பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் 17.5% ஆக வீழ்ந்தது, இதுவே இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவான பதிவாகும். இது ஒரு விநோதமான புதிரை முன்வைக்கிறது - பெண் கல்வியில் கணிசமான லாபங்களைக் காணும் ஒரு நாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் ஒருநாடு, ஏன் தொழிலாளர் தொகுப்பில் பெண்களிடமிருந்து அதிக பங்களிப்பைக் காணவில்லை என்பதே ஆகும்.
 

;