tamilnadu

img

100 நாட்களில் ரேசன் கடைகள்....? - ஜி.எஸ்.அமர்நாத்

நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை முறையைக் கொண்டு வர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஓராண்டு கெடு விதித்துள்ளது. நூறு நாட்களுக் குள் தொடங்கப்பட வேண்டிய திட்டங்களில் இதையும் ஒன்றாக வைத்து உள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் பொது விநியோகத் திட்டத்தின் பயனாளிகள் நாட்டில் எந்த மூலையி லும் மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும், இரண்டு குடும்ப அட்டைக்கு முடிவுகட்ட முடியும் என்றும் உணவு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்து உள்ளனர். ஏற்கெனவே 10 மாநிலங்க ளில் இது நடைமுறைக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கும் அமைச்சர் தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் பொது விநி யோக மையங்களில் விற்பனை அலகு இயந்திரங்களை நிறு வினால் இந்நடைமுறைக்கு எளிதில் மாறமுடியும் என்றும் கூறியுள்ளார்.

அவகாசம் முடிகிறது...

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறி முகப்படுத்தும் திட்டங்களில் தமிழகத்திற்கு எந்த பாதகமும் வராது என்று இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழக உணவுத் துறை அமைச்சர் உறுதியளித்தார். 2016 நவம்பரிலே உணவு பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. மத்திய அரசின் நடைமுறைக்கு மாறுவதற்கு தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. வரு கின்ற நவம்பர் மாதத்தில் இந்த அவகாசம் முடிந்துவிடும். பின் என்னதான் கூச்சலிட்டாலும் இச்சட்டத்தின் நடை முறைகளையும் எதிர்வரும் காலங்களில் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களையும் அம்மா ஆட்சி பின்பற்றித்தான் ஆக வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அனைவ ருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் 1,99,53,681 குடும்ப அட்டைகள் உள்ளன. 18,64,600 அந்தியோதயா அட்டைகள், 77,81,055 முன்னுரிமை குடும்ப அட்டைகள், 1,30,08,026 முன்னுரிமை யற்ற குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. சர்க்கரையும் மானியமாக வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்படாத சலுகைகள் தமிழக மக்களுக்கு தற்பொழுது இச்சட்டம் அமலாகும் வரை வழங்கப்படும். வெளி மாநிலத்திலிருந்து வருகிறவர்களில் முன்னுரிமையற்ற வர்களுக்கு மட்டும் தான் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க முடியும். மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அந்த  மாநிலங்களில் குடும்ப அட்டைகளை சரண்டர் செய்து கடிதம் அளித்தால் மட்டுமே புதிய குடும்ப அட்டையை இங்கு பெற விண் ணப்பிக்க முடியும். இது தற்போதைய நடைமுறையாகும்.

மானியம் நீடிக்குமா?

வட மாநிலங்களிலிருந்து வேலை பார்ப்பதற்காக தமிழகம் வருபவர்களுக்கு இங்கேயே குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடு என்று சிலர் கூறுகின்றனர். இது சரியல்ல, மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதே முக்கியமான கேள்வி. மத்திய அரசு கொண்டு வரும் ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் நோக்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பய னாளிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. பின் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவ தற்கு பதிலாக தனியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் முறை அறிமுகப்படுத்துவதற்கான வழியாகும். 2017-2018ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின்படி 84 அரசு திட்டங்கள், நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறைக்கு மாறியுள்ளன. எனவே சமூக பொருளாதார நிலைகளில் பின் தங்கியவர்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை படிப்படியாக குறைத்து, கடைசியில் அனைத்தையும் நிறுத்தி விடுவதுதான் அரசின் நோக்கம். ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாவட்ட வாரியாக உள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகள் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட அட்டைகள் குறித்து முழுமையாக தணிக் கை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

முன்னுரிமை நீக்க...

இதன்படி முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்ப அட்டைகளுக்கான 10 அடிப்படை விதிகள்:
 

1. வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பம்
2.தொழில் வரி செலுத்துவோரை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பம்
3.5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயியைக் கொண்ட குடும்பம்
4. மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றவர்களை உறுப்பினராக கொண்ட குடும்பம்.
5. நான்கு சக்கர வாகனத்தைச் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடுமபம்.
6. ஏ.சி. வைத்திருக்கும் குடும்பம்
7. மூன்று அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம்.
8. வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம்
9. அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ள குடும்பம்

இந்த குடும்பங்கள் மானியம் பெறத் தகுதியில்லாததாக கணக்கிடப்படுகிறது. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகளை தற்போது பயன்படுத்தி னால் அது மாற்றப்படும்.

மதுரை மாவட்டத்தில் முன்னுரிமை இல்லாத அட்டைகள் 484601, முன்னுரிமை உள்ள அட்டைகள் 352927, அந்தி யோதயா அன்னயோஜனா கார்டுகள் 57555 உள்ளன. இதில் முன்னுரிமை உள்ள 352927 குடும்ப அட்டைகள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன. முதல் கட்டமாக ஒரு மண்ட லத்திற்கு 100 அட்டைகள் ஆய்வு செய்யப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மதுரை, திருநகர், திருப்பரங்குன்றம், டிவிஸ்எஸ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு நடந்தது. ஆய்வில் டிவிஎஸ் நகர் பகுதியில் 90 சதவீதத்திற்கு அதிகமான முன்னுரிமை உள்ள அட்டைகளை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மண்ணெண்ணெய்க்கு வந்தது ஆபத்து

தமிழகத்தில் மண்ணெண்ணெய் படிப்படியாக குறைக் கப்பட்டு, தமிழக அரசு பல முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. நடப்பு நிதி ஆண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) முதல் காலாண்டுக்கு 48444கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்தது. நடப்பு ஆண்டில் 33 சதவிகிதத்தை குறைத்து 20 சதவித மண்ணெண்ணெய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போலி ரேசன் கார்டுகள் அதிக அளவில் இருப்பதாக வும், வெளி மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் விற்கப்படுவ தாகவும் இதை தடுக்கவே ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறுகிறது. இலவச கேஸ் விநியோக திட்டம் உள்ளதால் ஒதுக்கீட்டை குறைத்து உள்ளதாக தெரிவித்தும் உள்ளனர். இலவச கேஸ் வினியோகத் திட்டத்தைப் பொறுத்த வரை ஒரு சிலிண்டர்தான் இலவசம். அதற்குப் பின் காசு கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும். இதனால் மண்ணெண் ணெய்க்கு மீண்டும் மாறுகின்றன. மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போது மண்ணெண்ணெய் அடுப்புகள்தான் உதவின. இச்சூழலில் மண்ணெண்ணெய் விநியோகத்தைத் தொடர்ந்து குறைத்து வருவது கிராமப்புற மக்களை பெரிதும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

10 அடிப்படை விதிகளை மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மையானதாக தோன்றலாம். வறட்சியால் விவசா யம் பொய்த்துப் போன நிலையில் ஐந்து ஏக்கர் விவசாயிக ளும் வறுமைக்கு ஆளாக வேண்டியிருக்கும். கஜா புயலின் பாதிப்புக்குப் பின் இதை நேரடியாக பார்த்துவிட்டோம். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் ஓய்வுக்காலத்தில் வறுமையை சந்திக்க நேரிடலாம். தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொழுது வருமான வரி கட்டுபவர்கள் அந்த வேலையை இழக்கும் பொழுது வறுமை யால் சூழப்படலாம். மேலும் வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் குடும்பங்க ளும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்குவது இருப்புத் தேங்கிவிடாமல் இருப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நடைமுறை. எனவே கொள்முதல் மற்றும் விநியோக முறைகளை ஒழுங்குப்படுத்தாமல் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப் படும் உணவு தானியங்களை நிறுத்துவது உணவுதானிய இருப்பில் மட்டும் சிக்கலை ஏற்படுத்தாது பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

ஆய்வுகள் கூறுவது என்ன?

தற்போது வழங்கப்பட்டு வரும் உணவு தானியங்களில் பாதியளவே வழங்குவதாகவும், பெரும்பகுதி விரயமாவதாக வும் ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது விநியோக முறையின் விரயங்கள் மிகவும் குறைவு என்றும், ஜார்க்கண்ட், உத்தரப்பிர தேசத்தில் அதிகளவில் காணப்படுவதாகவும் கூறுகிறது. 2011-2012ல் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட விரயம் 57.6 சத வீதம் என்றால் தமிழ்நாட்டில் 11.9 சதவீதம் மட்டுமே விரயம். தமிழ்நாடு ஸ்மார்ட் கார்டு மற்றும் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்துவதில் முன்னுரிமையாக உள்ளது. எனவே விரயம் ஏற்படுவது அந்தந்த மாநிலங்களின் நிர்வாகத்தில் உள்ள பிரச்சனைகள் தவிர வேறல்ல. உணவுப் பொருட் களை பாக்கெட்டுகளாக வழங்கும் பொழுது விரயம் அறவே தவிர்க்கப்படும். பொது விநியோகத்திட்டத்தின் பயன்கள் உரிய பயனாளிக ளிடம் சேர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியாவில் தினந்தோறும் 19 கோடி பேர் பசித்த வயிற்றோடு தான் படுக்கைக்குச் செல்கிறார்கள். 5 வயதிற்குட்பட்ட குழந்தை களில் 48 சதவீதம் பேர் சத்துணவுக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டு உள்ளனர். தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் உணவு தானியங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களின் உணவுத் தேவையில் பாதியைக் கூட நிறைவு செய்வதில்லை.

அரிசியையோ, கோதுமையையோ விலை கொடுத்து வாங்கும் ஏழைகள் அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் வந்து சேர்கிற வரைக்கும் காத்திருப்பது உணவுப் பாதுகாப்பு  அல்ல. தமிழகத்தில் தற்போது உள்ள பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பசியில்லா மல் படுக்கைக்கு செல்வதையும் சத்துணவு குறைபாடு இல்லாமல் மனித சமூகம் வாழ வழி செய்வதுதான் உணவுப் பாதுகாப்பு ஆகும். ஒரே நாடு, ஒரே ரேசன் என்பது தற்போது தமிழகத்தில் உள்ள திட்டத்தை நாசம் செய்வது தான். எனவே 100 நாட்களுக்கு விழிப்போடு இருப்போம்.

கட்டுரையாளர் : தலைவர், தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம், சிஐடியு
 

;