1942 - அமெரிக்காவின் சில பகுதிகளை ராணுவ மண்டலங்களாக மாற்றுவதற்கும், அமெரிக்காவிலிருந்த ஜப்பானியர்களை காவல் முகாம்களில் அடைப்பதற்கும் உத்தரவிட்ட, ‘எக்சிகியூட்டிவ் ஆர்டர் 9066’ என்பதில், அரசுத்தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டார். இரண்டாம் உலகப்போரில் ஒதுங்கி நின்று, ‘கேஷ் அண்ட் கேரி’ என்று ஆயுதம் விற்றுக்கொண்டிருந்த அமெரிக்காவை, போருக்குள் இழுத்துவந்த முத்துத்துறைமுகத் தாக்குதலை, 1941 டிசம்பர் 7இல் ஜப்பான் நடத்தியது. அக்காலத்திய விமானங்கள் அதிகத் தொலைவு பறக்கக்கூடிய திறன் பெற்றவையாக இல்லை. அதிலும், விமானங்கள் சேதமுற்றால், அவை வந்த கப்பல்வரை வருவது சிரமம் என்பதால், அவற்றை மீட்க முத்துத்துறைமுகத்திலிருந்து 30 நிமிடங்களுக்குள் சென்றுவிடக்கூடிய, நிஹாவ் என்னும் ஹாவாய் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த தீவை ஜப்பான் தேர்ந்தெடுத்திருந்தது. அப்படிச் சேதமுற்ற ஒரு விமானம், அத்தீவில் விழுந்துவிட, அதன் விமானியை அத்தீவிலிருந்த ஜப்பானியர்கள் காப்பாற்றினர். உண்மையில் அவர்களுக்கு அப்போது, முத்துத் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த தகவலே தெரிந்திருக்கவில்லை என்றாலும், அது ஜப்பானியர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. தாக்குதலுக்கு அடுத்த நாளே ஜப்பான்மீது அமெரிக்கா போர் அறிவித்துவிட்ட நிலையில்தான், ஜப்பானியர்களை காவல் முகாம்களுக்கு மாற்ற அமெரிக்கா உத்தரவிட்டது. 1.12 லட்சம் ஜப்பானியப் பின்னணி கொண்டவர்கள் இவ்வாறு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஜெர்மன் பின்னணியுள்ள 11 ஆயிரம்பேர், இத்தாலியப் பின்னணிகொண்ட மூவாயிரம் பேர் உட்பட பல ஐரோப்பிய நாட்டவரும் முகாம்களில் அடைக்கப்பட்டனர். யூதர்கள் என்பது தனி இனம் என்று அமெரிக்கர்கள் அறிந்திருக்காததால், ஜெர்மனியிலிருந்து வந்திருந்த யூதர்களும் முகாம்களில் அடைக்கப்பட்டனர். 1944 டிசம்பரில் இந்த உத்தரவு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, முகாம்களிலிருந்தவர்கள் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். வீடுகள், தொழில்கள், சொத்துகள் ஆகிய அனைத்தையும் அவர்கள் இழந்திருந்தனர். ஜப்பானில் பிறந்தவர்கள் அமெரிக்கக் குடியுரிமைபெற 1952வரை அனுமதிக்கப்படவில்லை. 1976இல் அப்போதைய அரசுத்தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட், ஜப்பானிய அமெரிக்கர்கள் விசுவாசமாகவே இருந்ததாகக் குறிப்பிட்டு, இந்த நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரினார். 1982இல் அமைக்கப்பட்ட குழு, இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருபதாயிரம் டாலர் (தற்போது சுமார் ரூ.38.25 லட்சம்!) இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது. பாதிக்கப்பட்டவர்களில் உயிருடனிருந்தவர்களுக்கு, 1990-98 காலத்தில் இந்த இழப்பீட்டுத் தொகையும், ஒரு மன்னிப்புக் கடிதமும் வழங்கப்பட்டது.