டிக்டாக் செயலியால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆபாச வீடியோக்களும் பகிரப்படுகிறது ஆகவே அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 3ம் தேதி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் டிக்டாக் செயலியில் உள்ள வீடியோக்களை ஊடகங்களில் ஒளிப்பரப்ப கூடாது என்றும் நீதிமன்றம் ஆணையிட்டது. அதை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலி நீக்கப்பட்டது.
டிக்டாக் செயலி மீதான தடையை எதிர்த்து அந்த செயலியை உருவாக்கிய சீன நிறுவனமான பைட் டான்ஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த வாரம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்தது. அதை தொடர்ந்து இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் டிக்டாக் செயலி தொடர்பாக முடிவு எடுக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஏப்ரல் 24ம் தேதி முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 24ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டால் டிக்டாக் செயலி மீதான தடை ரத்து செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.