மனிதன் உட்கொள்ளும் உணவு வகைகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் மிக இன்றியமையாதவை. பொதுவாக நமது உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றவைகள் குறைவாகவும் இருக்கின்றன. அனைத்தும் மிதமாக இருந்தால் உடல்நிலையும் சீராக அமையும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் மிகச்சரியாகச் சொல்லி வைத்தார்கள். முக்கியமாக நாம் உட்கொள்ளும் உணவுக்கு இது மிகவும் பொருந்தும். இதில் முக்கியமானது என்னவென்றால் எது நமக்கு உகந்த அளவு என்பதை அறிந்து கொள்வதுதான். உணவின் அளவு குறைந்தாலோ அல்லது தொடர்ந்து கூடினாலோ நோய்கள் உண்டாக வழி வகுக்கும்.
கொழுப்புச் சத்து உணவுகளை அதிகம் உட்கொண்டால்பலவித இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். ‘கொலெஸ்டிரால்’ என்ற ரசாயனப் பொருள் கொழுப்பு உணவுகளில் அதிகமாக இருக்கிறது. கொலெஸ்டிராலில் பல வகை உண்டு. எச்டிஎல் என்ற ஒரு வகையைத் தவிர, மற்றவை எல்லாம் அளவு தொடர்ந்து கூடுமானால் அதிகக்கேடு விளைவிக்கும். எனவே எந்தெந்த உணவு வகைகளில் கொழுப்பு அதிகம் என்று அறிந்து கொள்ளுதல் நல்லது.அதிகம் கொழுப்பு உள்ள உணவுகள் பால், வெண்ணெய், நெய், எண்ணெய் மற்றும் மாமிச உணவுகள்என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். ஆனால், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவு வகைகள் குடலுக்குள் சென்ற பின் என்ன ஆகின்றன என்பதுபலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார்போஹைடிரேட் சர்க்கரையாக மாறுகிறது. உடலுக்குத் தேவையான அளவுக்குச் செலவழிந்தது போக மீதமுள்ள கார்போஹைடிரேட் கொழுப்பாக மாற்றப்பட்டு சேகரித்து வைக்கப்படும். தேவைப்படும்போது இதிலிருந்து உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். ஆனால் கொழுப்பு அதிகமாகி உடலில் சேர்ந்து தங்கிவிட்டால் பலவித நோய்களைக் கொண்டுவந்துவிடும். இத்தகைய கொழுப்பு தோலுக்கு அடியில், வயிற்றுக்கு உட்புறம், மற்றும் கல்லீரல் போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படும். கல்லீரலில் சேரும் கொழுப்பு பலவிதமான இன்னல்களை உண்டுபண்ணும்.
கல்லீரலின் வேலை
நம் உடலில் இருதயம், மூளை போன்ற உறுப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கல்லீரலும் முக்கியம். நாம் உட்கொள்ளும் உணவுகளின் சத்துகள் அனைத்தும் குடலிலிருந்து உறிஞ்சப்பெற்று நேராகக் கல்லீரலை சென்றடைகின்றன. கல்லீரல் எல்லாச் சத்துக்களையும் பிரித்தெடுத்து உடலின் வெவ்வேறு திசுக்களுக்கும் வழங்குகிறது.மேலும் கல்லீரல் ஆல்பமின் என்ற முக்கியமான புரதச் சத்தை உற்பத்தி செய்கின்றது. பித்த நீரைச் சுரக்கச் செய்து, நாம் உட்கொள்ளும் கொழுப்பு உணவு வகைகளை செரிமானம் செய்ய உதவுகின்றது. இரத்தக் கசிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இரத்தத்தை உறையவைக்கும் பொருட்களை கல்லீரல் உற்பத்தி செய்கின்றது. மேலும் நோய் எதிர்ப்புக்கான பலவகை செல்களையும் உற்பத்தி செய்கின்றது. இது போன்று பல மிக முக்கியமான வேலைகளைச் செய்கின்ற திறன் கொண்ட கல்லீரல் பழுதானால் பலவித சீர்கேடுகள் உண்டாகும். எனவே இத்தகைய வேலைகளைச் செய்யக்கூடிய முக்கியமான இந்த உறுப்பைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அறிவுடைமையாகும்.
கல்லீரல் நோய்கள்
மனித உடலில் கல்லீரல் மிகப்பெரிய உறுப்பாகும். பலவித தாக்குதல்களையும் தாங்கும் சக்தி உண்டு. இருப்பினும் பலவித காரணங்களால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும். இவற்றில் முக்கியமாக அளவற்ற மது குடித்தல், கல்லீரலை குறிவைத்துத் தாக்கும் வைரஸ் கிருமிகள் (ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்கள்) போன்றவைகளால் பொதுவாகவும், சில அரிதான காரணங்களாலும் கல்லீரல் நோயுறும். கடந்த சில ஆண்டுகளாக அதிகக் கொழுப்புச் சத்து உடலில் சேர்ந்தால் கல்லீரல் பழுதுபடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மது அருந்துவதால் கல்லீரல் கெடுவதற்கு ஒப்பானது இது.
கல்லீரல் கொழுப்பு
உணவிலுள்ள கொழுப்புச் சத்து அதிகமானால் கல்லீரல் பழுதுபடும். அதிகம் வறுத்த உணவுகள், வெண்ணெய், நெய், அனைத்து வகை எண்ணெய்கள், சிவப்பு மாமிச வகைகள், அதிகச் சர்க்கரை உணவுகள் அதிகமான பழங்கள் எல்லாம் உடலில் கொழுப்புச்சத்தாக மாறி சேமித்து வைக்கப்படும். இவை செலவிடப்படாமல் இருந்தால் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இருதய நோய், புற்று நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாக வழி வகுக்கும். ‘டிரைகிளிசரைட்ஸ்’ என்ற கொழுப்பு அதிகக் கெடுதலை ஏற்படுத்தும்.
மேற்கூறிய கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து நீண்ட நாள் தங்கிவிட்டால் அதனுடைய வேலையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கச் செய்யும்.டிரைகிளிசிரைட்ஸ் சிறு சிறு துகள்களாக பிரிந்து கல்லீரல் திசுக்களுக்கு இடையே பரவிடும். இது கல்லீரலின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். கொழுப்பிலுள்ள ஒரு வகை அமிலம் கல்லீரல் திசுக்களை நேரடியாகத் தாக்கி சிதைக்கும். கார்போஹைட்ரேட் உணவுகள் கொழுப்பாகத்தான் உடலில் மாற்றி சேகரித்து வைக்கப்படுமென்று பார்த்தோம் அல்லவா? தேவைப்படும்போது இது சர்க்கரையாக மாற்றப்பட்டு தசை நார்களுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுக்கின்றது. இத்தகைய மாற்றங்களை இன்சுலின் என்ற ஹார்மோன் உண்டாக்குகிறது. கல்லீரல் பழுதுபட்டால் இன்சுலின் அதனுடைய வேலையைச் சரிவரச் செய்ய இயலாது. அதனால் கொழுப்புச் சத்து சர்க்கரை மாற்றங்கள் சரிவர நடைபெறாது. மேலும் கல்லீரலில் கொழுப்பு அதிகமாகும்.
கல்லீரல் கொழுப்பு அதிகமாக அதிகமாக, திசுக்களின் எண்ணிக்கையும் வேலைத்திறனும் குறையும். திசுக்களை புதுப்பித்து உற்பத்தி செய்யும் திறனும் குறையும். மேலும்எதிர்ப்பு சக்தியுடைய வெள்ளை அணுக்கள் அதிக அளவில் சேர்ந்துவிடும். இந்நிலைக்கு அழற்சி அல்லது மதுவில்லா கல்லீரல் கொழுப்பு அழற்சி என்று பெயர். அதிக மது அருந்துவதால் ஏற்படும் விளைவிற்கு ஒப்பானது என்று பொருள். ஆகையால் மது அருந்தாமலேயே கல்லீரல் நோயுறும் என்று தெரிந்துகொள்ளலாம். இத்தகைய அழற்சி தொடர்ந்து இருக்குமானால் கல்லீரல் திசுக்களைச் சுற்றி நார்கள் போன்ற திசு வளர ஆரம்பிக்கும். இதற்கு ‘ஃபைப்ரோசிஸ்’ என்று பெயர். மிருதுவான கல்லீரல் கடினமானதாக, கெட்டியானதாக மாறும். அதன் வேலைத்திறன் மேலும் குறையும். இத்தகைய நிலை உருவானால் நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பசி குறையும், பலவீனம் ஏற்படும், உடல் இளைக்கும், செரிமானம் குறையும். மருத்துவரிடம் இப்போதுதான் ஆலோசனை பெறத் தோன்றும். இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் கல்லீரலிலிருந்து ஊசி மூலம் திசு எடுத்து (பயாப்ஸி) மைக்ராஸ்கோப் மூலம் கண்டறியலாம். இத்தகைய நிலை வரையில் மருத்துவ சிகிச்சைமேற்கொண்டு மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியும்.
சிகிச்சையின்றி கல்லீரலில் கொழுப்பு தொடர்ந்து இருக்குமேயானால் மேற்கொண்டு நார்த் திசுக்கள் அதிகரித்து நல்ல திசுக்களை அழித்துவிடும். பிறகு கல்லீரல் சுய தன்மையை இழந்து மிகவும் கடினமாகி இறுகிவிடும். அதனுடைய செயல்பாடு வெகுவாகக் குறையும். இந்நிலைக்கு ‘சிர்ரோசிஸ்’ என்று பெயர். இந்நிலைக்கு வந்துவிட்டால் பக்க விளைவுகள் நிறைய ஏற்படும். குறுகிய காலத்தில் உயிரிழக்கவும் நேரிடும். அதுமட்டுமின்றி சிர்ரோசிஸ் ஏற்பட்டுவிட்டால் கல்லீரலில் புற்றுநோய் உருவாகவும் அதிக வாய்ப்புண்டு.
கல்லீரல் கடினமாகி சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டுவிட்டால் பலவித பக்க விளைவுகள் ஏற்படும். முக்கியமாக மிகுந்த களைப்பு, பசியின்மை, உடலில் நீர் சேர்ந்து வீக்கம் உண்டாகுதல், மஞ்சள் காமாலை, இரத்த வாந்தி எடுத்தல் போன்ற கடுமையான கோளாறுகள் ஏற்படும். இந்தப் பாதிப்புகள் அதிகமாகி உயிரிழக்கவும் நேரிடும். சிர்ரோசிஸ் ஏற்பட்ட பின் ஐந்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் உயிரிழப்பர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. புற்றுநோய் உருவாகிவிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியா
தென்பது அனைவரும் அறிந்ததே.
சிகிச்சை
வருமுன் காப்பதே அறிவுடைமை. எல்லோரும் காரணங்களை அறிந்து தடுத்துக்கொள்வதுதான் சிறந்தது.கொழுப்புணவை தவிர்த்தல், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்தல், தினசரி உடற் பயிற்சி செய்தல், மதுவைத் தவிர்த்தல் அல்லது அளவோடு அருந்துதல் போன்ற முறைகளால் கல்லீரல் கொழுப்பைக் குறைக்கலாம்.நினைவில் கொள்க - கல்லீரல் கொழுப்பைக் குறைக்கஉரிய மருந்துகள் எதுவும் தற்போது இல்லை. சர்க்கரை நோய்க்கான மருந்துகள், கொலெஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைட்ஸ் போன்ற கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள், வைட்டமின்-இ மருந்துகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை ஓரளவுக்குப் பலனளிப்பதாகக் கருதப்படுகிறது. கல்லீரலில் படர்ந்திருக்கும் நார்த் திசுக்களைக் குறைப்பதற்குப் புதிய மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் அண்மைக்காலமாக அதிகமாக நடைபெறுகின்றன. விரைவில் அந்த மருந்துகள் வரும் என எதிர்பார்ப்போம்.
நாற்பது வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டால் இந்நோயைஆரம்பத்திலேயே கண்டறியலாம். எல்லாக் காரணங்களையும் கண்டறிந்து கல்லீரல் கொழுப்பைக் குறைத்து நோய் முற்றாமல் கவனித்துக்கொள்ளலாம். ஆகவே, நோய்களும் மருத்துவமும் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் இந்தக் கல்லீரல் கொழுப்பு பற்றிய புரிதலும் முக்கிய இடம் பெற வேண்டும்.
கட்டுரையாளர் : மருத்துவர் ஆர்.பி.சண்முகம், இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை வல்லுநர்