states

போராட்டம் தொடரும் புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் அறிவிப்பு

புதுச்சேரி, மே 25- மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். மின்துறையை தனியார்மயமாக்கு வதற்கு புதுவை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கியுள்ளனர்.  இம் மாதம் 23 ஆம் தேதி முதல் போராட்ட குழு மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளது. அதன்ஒரு பகுதியாக விதிப்படி மட்டும் வேலை செய்து வரு கின்றனர். எச்.டி. மீட்டர் ரீடிங் பணியை நிறுத்தியுள்ளனர். புதிய மின் இணைப்பும் வழங்கவில்லை. போராட்டம் 3ஆவது நாளாக தொடர்ந்தது. இதுகுறித்து போராட்டக்குழு பொதுச் செயலாளர் வேல்முருகன் கூறியதாவது: தில்லியில் மின்துறையை தனியார் மயமாக்கினர். அங்கு 60 விழுக்காடு மின்துறை நட்டத்தில் இயங்கியதால் தனியார் மயமாக்கப்பட்டது. ஆனால் புதுவையில் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. எந்தவித நட்டமும் கிடையாது. அரசு துறைகளில்தான் மின்துறைக்கு வரவேண்டிய கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. அப்படியிருக்க மின்துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? மின்துறை தனியார்மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த வாரம் முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;