அசாமில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை நீக்குவோம்
கொக்கரிக்கும் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா
கவுகாத்தி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இவர் தன்னை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்காகவும், பாஜக - ஆர்எஸ்எஸ்-ஸின் வகுப்புவாத நம்பிக்கையை பெறுவதற்காகவும், அம்மாநி லத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களை வெளி யேற்றும் வகையில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அசாம் முஸ்லிம் மக்களை “சட்டவிரோத வங்காளதேசத்தினர்” என்று முத்திரை குத்தி, அவர்களை வெளியேற்றும் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் ஹிமந்தா பிஸ்வா. மேலும் பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், வனத்துறை மூலமாகவும் ஆக்கிரமிப்பு என்று அறிவித்து முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்து அசாம் பாஜக அரசு விரட்டி வருகிறது. மேல் அசாமில் பதற்றம் ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்து நாட்டிலேயே அதிகளவில் முஸ்லிம் மக்கள் வாழும் மாநி லமாக அசாம் உள்ளது. அங்கு 3.6 கோடி அளவில் மொத்த மக்கள் தொகை உள்ளது. அதில் ஒரு கோடியை தாண்டும் வகையில் முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது. அதே போல மொத்தமுள்ள 35 மாவட்டங்கள் 5 பிராந்திய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேல் அசாம் (8 மாவட்டங்கள்), வட அசாம் (4 மாவட்டங்கள்), மத்திய அசாம் (6 மாவட்டங்கள்), கீழ் அசாம் (13 மாவட்டங்கள்) மற்றும் பராக் பள்ளத்தாக்கு (3 மாவட்டங்கள்) ஆகும். இந்நிலையில், மேல் அசாம் பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களை குறிவைத்து, அசாமில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை நீக்குவோம் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளிப்படையாக வெறுப்பு பேச்சுகளுடன் கொக்கரித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”அசாம் மாநிலத்தில் நடு மற்றும் கீழ் அசாமைப் பாதுகாப்பதில் இருந்து நமது முந்தைய தலைமுறையினர் தோல்விய டைந்தனர். ஆனால் இப்போது நாங்கள் (பாஜக அரசு) மேல் அசாமைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளோம். அவர்கள் (முஸ்லிம்) அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் போது, அவர்களின் பெயர் வாக்காளர் பட்டிய லிலிருந்து நீக்கப்படும். மீண்டும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்” என அவர் கூறினார். அதாவது பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தி, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா வெளிப்படையாக அறிவித் துள்ளார். இந்த அறிவிப்பால் மேல் அசாம் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கண்டனம் பாஜக - தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணியின் வாக்குத் திருட்டு, பீகார் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்த அடக்குமுறைக்கு இடையே அசாமில் முஸ்லிம் மக்களின் வாக்குரிமையை நீக்கப் போவதாக ஹிமந்தா பிஸ்வா வெளிப்படையாக அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் அசாமின் கோலாகாட் பகுதியில் முஸ்லிம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்பு ஹிமந்தா பிஸ்வா இந்த வெறுப்புப் பேச்சை கக்கியுள்ளார். சுதந்திர தின உரையிலும்... முன்னதாக, 79ஆவது சுதந்திர தினத்தின் போது தனது உரையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா,”அறியப்படாத சமூகத்தில் (அந்நியர்கள் - ஓச்சினகி மனுஹ் - ochinaki manuh - அசாமி மொழி)” அசாமின் சமூக - அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் கவலை யாக உள்ளது. இந்த அறியப்படாத சமூகத்தில் இருப்பவர்கள் “லவ் ஜிகாத்” மற்றும் “லேண்ட் ஜிகாத்” உட்பட பல வகையான “ஜிகாத் தில்” ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேற் கூறப்பட்ட சமூகத்தில் இருந்து 1.2 லட்சம் பிகாக்கள் நிலம் (1 பிகா = 1,618.7 சதுர மீட்டர்) அசாமில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்”என அவர் கூறினார். ஹிமந்தா பிஸ்வா சர்மா அறியப்படாத சமூகம் என்று கூறுவது மியா முஸ்லிம் மக்கள் என முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.