உமர் காலித் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது வடகிழக்கு தில்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை யில் 53 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 700 பேர் காயமடைந்தனர். பாஜக, இந்துத்துவா குண்டர்கள் கட்டவிழ்த்துவிட்ட இந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு ஆய்வு மாணவர் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்பட 9 பேரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 பேரும் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மேல்முறை யீட்டு மனு செவ்வாய்க்கிழமை அன்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தில்லி காவல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”நாட்டுக்கு எதிராக குற்றம் செய்தால் விசாரணை முடியும் வரை சிறையில் இருப்பதே நல்லது” என வாதிட்டார். இதனைத் தொ டர்ந்து 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கைதாகியுள்ள அனைவரும் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
