ஸ்ரீநகர், மார்ச் 24- ஜம்மு -காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபல மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் பார்வையாளர்களுக்கு திறக்கப் பட்டது. ஸ்ரீநகரில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி, இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டம் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். துலிப் விழாவையொட்டி கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த மலர்த்தோட்டம் புதனன்று பொது மக்களுக்கு திறக்கப் பட்டது. முதல் நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் குவிந்தனர். இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.