ஹைதராபாத், ஜூலை 9 - தெலுங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ், பாஜக-வோடு கடுமையாக மோதி வருகிறார். ஹைதராபாத் பாஜக தேசிய செயற்குழு கூட்டம், அதையொட்டிய பொதுக்கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி கே. சந்திரசேகர ராவைக் குறிவைத்துத் தாக்கினர். சந்திரசேகர ராவும், கறுப்புப் பணம் மீட்பு, வங்கிக் கணக்குகளில் போடுவதாக கூறிய ரூ. 15 லட்சம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மோடிக்கு நினைவுபடுத்தி- அவையெல்லாம் என்னாயிற்று? என்று சுடச்சுட பதிலடி கொடுத்தார். இதனிடையே, பாஜக-வினர் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கையில் எடுத்தனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஊதியம், செலவினம், அண்மையில் அண்டை மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தெலுங்கானா பாஜக-வினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பினர்.
இதன்மூலம் சந்திரசேகர ராவ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து, பாஜக எடுத்த அஸ்திரத்தை, அதற்கு எதிராகவே திருப்பி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு ஆன செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் அலுவலகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை மற்றும் இதர முக்கியமான ஒன்றிய அமைச்சகங்களிடமும் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன செலவுத்தொகை மட்டுமல்லாமல், அவரது ஆடைகளுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்தும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.