states

img

விமான நிலையங்கள் தனியார்மய வருவாயில் மாநிலங்களுக்கும் பங்கு வேண்டும்!

புதுதில்லி, ஏப். 25 - தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் வருவாயில் மாநில அரசுக்கு பங்கும், ஒப்படைக்கும் நிலத் திற்கு ஈடாக லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த கருத்திற்கு, காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஜார்க்கண்ட் மாநில அரசும் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளன. நரேந்திர மோடி அரசானது, நாட்டிலுள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் பராமரிப்புப் பணியை தனியார் முத லாளிகளுக்கு குத்தகைக்கு விடும் வேலையில் இறங்கியுள்ளது. அகமதாபாத், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் மங்களூரு ஆகிய 6 விமான நிலை யங்களை, ஏற்கெனவே 50 ஆண்டு களுக்கு ‘அதானி எண்டர்பிரைசரஸூ ’க்கு குத்தகை விட்டு முடித்துள்ளது. புதிதாக, ‘தேசிய பணமாக்கல் கொள்கை’ என ஒன்றை வகுத்த மோடி அரசு, இந்த கொள்கையின் கீழும், இந்திய விமான நிலையங் கள் ஆணையத்தால் (AAI) நடத்தப் படும் 25 விமான நிலையங்களை, 2025  ஆம் ஆண்டுக்குள் குத்தகைக்கு விட்டு பணமாக்கத் தீர்மானித்தது. இவ்வாறு குத்தகைக்கு விடும்  விமான நிலையங்களின் பட்டிய லில், புவனேஷ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, நாக்பூர், பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜய வாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி உள்ளிட்ட விமான நிலையங்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய விமான நிலையங்களும் இடம்பெற்றிருந்தன.

பொதுவாக விமான நிலையங்கள் புதிதாக கட்டப்படும்போதும், அல்லது விரிவாக்கப்படும்போதும், அதற்குத் தேவையான நிலத்தை  மாநில அரசுகள்தான் கையகப் படுத்துகின்றன. அந்த நிலங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு, வெறும் 1 ரூபாய் என்ற விலையில் 99 வருட குத்த கைக்கு அளிக்கின்றன. அந்த வகை யில், அண்மையில் தனது புதிய  தொழிற்கொள்கையை வெளி யிட்டிருந்த தமிழ்நாடு அரசு, இந்திய  விமான நிலையங்கள் ஆணைய மானது, மாநில அரசுகள் இலவச மாக வழங்கிய நிலத்தை, மூன்றாம்  தரப்பினரான தனியாருக்கு கைமா ற்றும் பட்சத்தில் அதன்மூலம் பெறும் வருமானத்தில் மாநிலங்களுக்கும் பங்கு அளித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இது புதிய விவாதங்களை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநில அரசுகளும் வர வேற்பு தெரிவித்துள்ளன. “இது மிகவும் தர்க்கரீதியானது. நீங்கள் நிலத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கும்போது, ஒரு பங்குதாரராக மாறுகிறீர்கள். அது உங்களுடைய சொத்து. அந்தச் சொத்து வேறொரு தரப்பினருக்கு மாற்றப்படும்போது, குறிப்பாக வாங்குபவர் தனியாராக இருக்கும்பட்சத்தில், ஒரு பங்கு தாரர் மட்டுமே பங்கைப் பெற முடி யாது. மாநில அரசும் ஒரு பங்கு தாரர். அரசியலமைப்பின் போது வைக்கப்பட்ட மூலதனத்தைப் பொறுத்து அதன் பங்கைப் பெற வேண்டும்” என்று சத்தீஸ்கரின் சுகா தாரம், குடும்ப நலம் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல ஜார்க்கண்ட் நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஓரானும், “நிலம் அரசுக்குச் சொந்தமானது. அதன் நடவடிக்கையும் மாநி லத்தில்தான் நடைபெறுகிறது. இது போன்ற சூழ்நிலையில், வருவாய் பங்கைப் பெற்றால், மாநிலங்களின் வருமானமும் உயரும். அத்த கைய கோரிக்கையை நாங்கள் ஆத ரிக்கிறோம். அனைத்து நிலங்களும் மாநில அரசாங்கத்திற்குச் சொந்த மானது. மாநில அரசுகள்தான் நிலங்களை ஒன்றிய அரசுக்கு கொடுக்கின்றன. எனவே, தனியார் மயமாக்கலால் கிடைக்கும் வரு வாயை, மாநில அரசுகளுடன் ஒன்றிய  அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். எனினும், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் அரசுகளின் இந்த கோரிக்கை தொடர்பாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையமோ,  சிவில் விமான போக்குவரத்து அமைச் சகமோ, நிதி ஆயோக் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.