states

img

“யாரெல்லாம் டீமில் இருக்கலாம், ஜோதிடரே..”

கால்பந்து சங்கம் விளையாடும் அணியைத் தீர்மானிக்க ஜோதிடரை நாடியது என்ற செய்தியைப் படித்தவுடன், கிரிக்கெட் சங்கமும் கிளம்பியது. அவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் வாசலிலேயே காத்திருந்த ஜோதிடர் “வாங்க.. வாங்க” என்று வரவேற்றார். ரோஜர் பின்னி, ஜெய் ஷா மற்றும் ராஜீவ் சுக்லா ஆகிய மூவரும் உள்ளே நுழைந்தனர். நேரத்தைக் கடத்தாமல் ராஜீவ் சுக்லா தொடங்கினார். கையில் இருந்த காகிதத்தை நீட்டியவாறே, “இதுல 25 வீரர்களோட பேரு இருக்கு... இவங்களோட திறமை பத்தி ஜோதிடத்துல கணிச்சு சொன்னா, யார் யார உலகக்கோப்பைல விளையாட வெக்கலாம்னு பாத்துரலாம்...  “ “ஓ... பிரமாதமா பண்ணிடலாம். அந்த கால்பந்து டீம அவன்தான் கணிச்சு சொன்னானாம்... சொதப்பிடுச்சாமே... அவனுக்கு ஜோதிடம்னே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாது..”

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  ஜோதிடரோ கண்களை மூடினார். பல நிமிடங்கள் கழிந்தன. ராஜீவ் சுக்லா, “ஜோதிடரே” என்றழைத்தார். பட்டியலைக் கீழே வைத்தவாறே “நீச்சம், வக்கிரம், அஸ்தங்கம், வர்கோத்தமம், உச்சம்” என்றார்.  “இவங்க பேர்லாம் பட்டியல்ல இல்லையே” என்று பின்னி கேட்டார்.  “இதெல்லாம் கிரக நிலைகள். ஜோதிடம் சொல்றதுக்கு முன்னாடி இதெல்லாம் எப்புடி இருக்குனு பாத்துக்கணும்..” என்றவரை விடாமல், “எல்லாம் சரியா இருக்கா” என்ற பின்னியை ஜெய் ஷாவும், ராஜீவ் சுக்லாவும் முறைத்தனர். முதல் பெயரைப் பார்த்ததுமே, “என்ன இது இங்க மூணு எழுத்து, அப்புறம் ஒரு மூணு எழுத்து... ரெண்டையும் கூட்டுனா ஆறு... அத ரெண்டால வகுத்தா மறுபடியும் மூணு..” ரோகித் சர்மா பெயரை அடித்தார்.  “எதுக்குக் கூட்டணும்.. எதுக்கு வகுக்கணும்”னு பின்னி கேட்க, “இதச் சொல்லிட்டா, நீங்க ஜோசியம் பாத்துருவீங்களே” என்று சத்தமாகச் சிரித்தார். இந்த ராசிலாம் மைதானத்துலயே இறங்கக்கூடாதுன்னு சுப்மான் கில்லுக்கு சொல்லி விட்டார். 

அடுத்த பெயர் விராட் கோலி என்று பார்த்தவுடன், கண்களை மூடிய ஜோதிடர், “குரு பகவான் இவரோட ராசில நின்னு 5 ஆம் பார்வையை சுக்கிரன் மேல வெக்குறாரு... இவரு பந்து வீசுனா நெறய விக்கெட்டு விழும்..” என்றார்.  “ஆனா.. இவரு மட்டையாளர்..??” தன்னை நோக்கி வரும் பந்தைக் கவனிப்பது போல் கண்களை பின்னி குறுக்கினார். “குருவோட பார்வை மாறிடும்... பரவாயில்லையா..?” என்றவுடன்  பின்னியை சுக்லா அடக்கினார். “இதென்ன பாண்டியா... பாண்டியன்னு இருக்கனும்... பேர மாத்துனா டீமுல இருக்கலாம்.. ‘ஜ’ல ஆரம்பிச்சு ‘ஜ’ல முடிஞ்சா டீமுக்கு நல்லதில்ல.. ஜடேஜா வேண்டாம்..”  “ராகுல் இருக்க...”னு  சொல்ல ஆரம்பித்தவர் “இந்தப் பேரு இவருக்குப் பிடிக்காதே” என்று மனதில் ஓடிக்கொண்டே ஜெய் ஷாவின் முகத்தைப் பார்த்து “வேண்டாம்... வேண்டாம்..” என்றார். ரெண்டே ரெண்டு மட்டையாளர்கள்... மற்ற எல்லாரும் பந்து வீச்சாளர்கள்னு ஜோதிடர் கொடுத்த பட்டியல் வந்து நின்றது. “ஆல் ரவுண்டர் இல்ல” என்று கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க தோரணையில் ராஜீவ் சுக்லா இழுத்தார். “கபில் தேவக் கூப்புட்டுக்கோங்க... அவருக்கு இப்போ துருதுரா யோகம்..” என்றார்.. மூவரும் கொஞ்சம் மிரண்டுதான் போனார்கள். “அவருக்கு வயசாச்சே” என்ற பின்னியை, “ஜோதிடத்தை நீங்க நம்பலையோ” என்று ஜோதிடர் அதட்டினார்.  அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜெய் ஷா, “ரோகித் சர்மாதான் கேப்டனா இருப்பார்னு நாங்க வெச்சுருந்தோம்.. இப்போ யாரப் போடுறது..” கண்களை மூடினார், ஜோதிடர். “பிரக்ஞானந்தாவப் போடுங்க” என்று சொல்லி அவர் கண்களைத் திறப்பதற்கு முன் மூவரும் ஓடத் தொடங்கியிருந்தனர்.

கற்பனை: கணேஷ்