states

img

தேசத் துரோகச் சட்டம் நிறுத்தி வைப்பு!

வழக்கு, விசாரணை, கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் ஒன்றிய-மாநில அரசுகளுக்குத் தடை

தேசத்துரோகச் சட்டத்தைக் கிழித்தெறிக: சிபிஎம்

தேசத்துரோகக் குற்றப்பிரிவை ஆய்வு செய்திட நீதித்துறை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்,  இந்தச் சட்டத்தின் ஷரத்துக்களை மறுபரிசீலனை செய்திட இருப்பதாகவும், ஆய்வு செய்திட இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க ஒன்றிய அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.  இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருப்பதன் மூலமும், இந்தச் சட்டத்தின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்ய ஒன்றிய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் தடை விதித்து இருப்பதன் மூலமும், உச்சநீதிமன்றம் சிறிது நிவாரணம் அளித்திருப்பது நன்று. அரசாங்கத்தின் மறுஆய்வு மனு வரும்வரை உச்சநீதிமன்றம் காத்திருக்கக்கூடாது. இந்த வழக்கு  விசாரணைக்கு வரும்சமயத்தில், காலத்திற்கொவ்வாத கொடுங்கோன்மையான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவைக்  கிழித்தெறிந்திட வேண்டும்.’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்ட முடிவுகளை விளக்கி புதுதில்லியில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி கூறியதிலிருந்து...

புதுதில்லி, மே 11 - தேசத் துரோக வழக்கு பதிவு  செய்யப்படும் 124 (ஏ) சட்டப்பிரிவு நீடிக்க லாமா? என்பது குறித்து ஒன்றிய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அதுவரை 124(ஏ) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தக் காலத்தில், ஏற்கெனவே தேசத் துரோக வழக்கில் கைது  செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள்  மீது விசாரணை நடத்தக் கூடாது, மாறாக, அவர்கள் ஜாமீன் கோரினால், நீதிமன்றங்கள் அவர்களுக்கு ஜாமீன்  வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உரிய 124ஏ சட்டப்பிரிவு, 152 ஆண்டு களாக அமலில் இருக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து சட்டம் ஆகும். இந்த  சட்டத்தை நீக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பலரும் கோரிக்கை எழுப்பி  வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந் தார்.

“தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உரிய சட்டப்பிரிவு 124-ஏ நீக்கப்பட வேண்டும். இந்த சட்டப்பிரிவு அர சியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒன்றிய, மாநில அரசுகள் அரசியல் காரணங்களுடன் தனிநபர்களை அச்சுறுத்துவதற்காக இதைத் தவறாக பயன்படுத்துகின்றன” என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். எஸ்.ஜி. ஒம்பத்கரே-வைப் போலவே மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தேசத்துரோகச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருந்தனர். “தேசத் துரோகச் சட்டம் செல்லுபடியாகும்” என கேதா்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு 1962-ஆம்  ஆண்டு தீா்ப்பு அளித்திருந்த நிலை யில், அந்த தீா்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

ஒன்றிய அரசின் வாதம்

செவ்வாயன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். “தேசத்துரோக குற்றத்திற்கான இந்திய  தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவை சட்டத்தை ரத்து செய்ய முடியாது.  ஆனால், இதில் உள்ள சட்டப் பிரிவு களை மறுபரிசீலனை செய்ய தயா ராகவே இருக்கிறோம். எனவே, உரிய  குழு அமைக்கப்பட்டு சட்டம் மறு பரிசீலனை செய்யப்படும் வரை இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.  “தேசத் துரோக சட்ட விதிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி  முக்கிய கருத்துகளைக் கொண்டிருக் கிறார். சிவில் உரிமைகளைப் பாது காக்க அவர் தயங்குவதில்லை” என்றும் துஷார் மேத்தா அப்போது கூறினார். முன்னதாக, “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் காலாவதியான 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ரத்து செய்யப்பட்டன. ஆங்கிலேயர்களின் காலனித்துவ சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருக்கிறார்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில்  அதன் கூடுதல் செயலர் மிருத்யுஞ்சய குமார் நாராயண் நீதிமன்றத்தில் பிர மாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.  ரமணா தலைமையிலான, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகி யோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “தேசத் துரோக சட்டத்தை மறுபரி சீலனை செய்ய ஒன்றிய அரசு எவ்வளவு காலம் எடுக்கும்?” என்று கேள்வி எழுப்பினர்.  இதற்கு, “குறிப்பிட்ட காலகட்டத் தைக் கூறுவது கடினம். எனினும் இதற் கான செயல்முறை தொடங்கிவிட்டது. பிரமாணப் பத்திரம் என்பது, துறை ரீதியான பதில் மட்டுமல்ல; அரசின் நிலைபாட்டிலேயே மாற்றம் உள்ளதை இதில் நீங்கள் பார்க்க முடியும்” என்று  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கினார். ஆனால், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சட்டத்தை மாற்றுவது அவர் களின் (ஒன்றிய அரசின்) உரிமை. ஆனால் தற்போது அமலில் இருக்கும் சட்டத்துக்கு எதிராகவே நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அதில் எங்களுக்குத் தீர்வு வேண்டும்” என்றார்.  மேலும், “சட்டத்தை மாற்றும் வரை  ஏற்கனவே கைதானவர்கள் நிலை என்ன? அவர்கள் அதுவரை சிறையில் தான் இருக்க வேண்டுமா? சட்டத்தை மாற்றும் வரை இதே வழக்கில் பல்வேறு விசாரணைகளும், கைதுகளும் நடந்து கொண்டுதான் இருக்குமா?” என அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினார்.

அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மாநில அரசுகள்தான் வழக்குகளைப் பதிவு செய்கின்றன. இதற்கு ஒன்றிய அரசால் என்ன செய்ய முடியும்?. மேலும் சட்டப் பிரிவு 124ஏ நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாகும். இது தவறாகப் பயன்படுத்தப்படும் போது, நீதிமன்றங்களை அணுகி தீர்வு பெற வாய்ப்புகள் உள்ளன” என்றார். தலைமை நீதிபதி என்.வி. ரமணா அப்போது குறுக்கிட்டு, “அனைத்து மக்களாலும் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. அதுவும் அரசே அவர் களுக்கு எதிராகச் செயல்படும்போது, அவர்கள் சிறையில்தானே இருக்க நேரிடும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல துஷார் மேத்தாவிற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “’இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு’ என்று 124ஏபிரிவில் எங்கே இருக்கிறது? அந்த சொற்றொடர் 19(2) இல் மட்டுமே உள்ளது.  இந்தச் சட்டப்பிரிவு 124ஏ என்பது அரசின் மீதான அதிருப்தி பற்றியது. இந்தச் சட்டப்பிரிவு 124 என்பது அரசியலமைப்பிற்கு முன்பிருந்து இருக்கும் சட்டமாகும், அந்தக் காலகட்டத்தில் அரசும் நாடும் ஒன்றுதான்.  ஆனால், இப்போது இருக்கும்​அரசிய லமைப்பின் கீழ், அவை வேறு வேறானவை”  என்று விளக்கினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம், தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் வேண்டும் என்றால், அது வரையில் தற்காலிகமாக சட்டத்தை நிறுத்தி  வைக்க முடியுமா? என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு இது தொடர்பாக  ஒன்றிய அரசிடம் ஆலோசித்து விட்டு புதன்கிழமை பதிலளிப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

‘தெளிவாகச் சொல்லுங்கள்’

அவரிடம் பேசிய நீதிபதிகள், ‘தேசத் துரோக வழக்குப் பிரிவு தவறாக கையாளப் படுவதாக ஒன்றிய அரசே கவலை தெரி வித்துள்ளதால், இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த வழக்குப் பதி வுக்கு எதிராக வருபவர்களை கீழ் நீதிமன்றங் களை அணுகுங்கள், மாதக் கணக்கில் சிறையில் இருங்கள் என நாங்கள் தொடர்ந்து கூற முடியாது. எனவே, முந்தைய நிலுவை தேசத் துரோக வழக்குகள் குறித்தும் மக்களைப் பாதுகாக்க இனி புதிதாக பதிவு செய்யப்படும் தேசத் துரோக வழக்குகளில் அரசின் நிலைப்பாடு குறித்தும் பதில் தேவை” என்று வலியுறுத்தினர்.  “தேசத்துரோகச் சட்டம் குறித்து ஒன்றிய  அரசு தனது மறு ஆய்வை நடத்தி முடிக்கும்  வரை, 124ஏ பிரிவின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்தி வைக்கலாமா? தேசத் துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் வரையில், மாநில அரசுகள் 124ஏ பிரிவை பயன்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசே தனது அமைச்சகத்தின் மூலம் உத்தரவிட முடியுமா? என்று தெளிவான விளக்கங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினர்.  மேலும், ‘தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு அதிகாரம் குறைக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் காவலர்கள் களத்தில் அந்தப் பிரிவை தீவிரமாக பயன்படுத்தி வரு கிறார்கள் என்பதால், ஒன்றிய அரசு உத்த ரவு பிறப்பிக்காமல் தேசத் துரோக வழக்குப்  பதிவை நிறுத்த முடியாது’ என்பதையும் சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த விவ காரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க 24 நேரம் அவகாசமும் வழங்கினர். ஒன்றிய அரசின் பிடிவாதம் அதனடிப்படையில், புதனன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா  அமர்வு முன்பு ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தேசத் துரோகச் சட்டத்தை நிறுத்தி வைக்க முடியாது. மாநில காவல்துறையினரை தேச துரோக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கு மாறு உத்தரவிடவும் முடியாது. இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் என்று கண்டறியப்பட்ட பிறகும் தேசத் துரோக  வழக்குப் பதியாமல் இருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது” என்று ஒன்றிய அரசின் பதிலை நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்தார். 

அதிரடி உத்தரவு

ஆனால், அரசு வழக்கறிஞரின் வாதத்தை  முழுமையாக நிராகரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, “தேசத்துரோக சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை 124ஏ  சட்டப் பிரிவின்கீழ் தேசத் துரோக வழக்கு கள் பதிவு செய்வதை நிறுத்தி வைக்கிறோம்” என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல், தேசத்துரோக சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள வழக்குகளில் விசாரணை மேற் கொள்வதையும், நடவடிக்கை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில்  இந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால், பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். நீதி மன்றம் பாதிக்கப்பட்ட நபர்கள் மீதான தேச துரோக வழக்கை உடனே ரத்து செய்யலாம். தேசத் துரோக வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கோரி அணுகினால், நீதிமன்றங்கள் அவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் அதிரடியாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

152 ஆண்டு சட்டம்

இந்த உத்தரவின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு 152 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒடுக்குமுறைச் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 1870-இல் பிரிட்டிஷ் நீதிபதி ஜேம்ஸ் ஸ்டீபன் பரிந்துரையின் பேரில் இந்தியா வில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமா னது, அரசுக்கு எதிராக வெறுப்பை வெளிப் படுத்துவது, அரசுக்கு எதிராக எழுதுவது, நாடகம் மற்றும் படம் அல்லது வேறு வகையில் தேசத்திற்கு எதிரான செயல்களை தேசத்துரோக குற்றத்தின் கீழ் வகைப்படுத்துகிறது. 124ஏ சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபணமானால் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னை தொடங்கி ஆயுள் வரை ஒருவரை சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.