தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் (SAU) வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அப்பல்கலைக்கழகம் மூடி மறைக்க முயற்சிப்பதாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பி.டெக் படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவி, கடந்த அக்டோபர் 12-ஆம் காணாமல் போய் இருக்கிறார்கள். அடுத்த நாள், மாணவி ஆடைகள் கிழிந்து காயமடைந்த நிலையில் வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கடந்த 14-ஆம் தேதிதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், ஒரு காவலர் உட்பட நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும், கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்திருந்தார்.
சம்பவத்திற்கு முந்தைய நாட்களில் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆர்யன் யாஷ் என்ற பெயரில் இருந்து பாலியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் உள்ள மெசேஜ்களும், மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் தனக்கு வந்ததாகவும், அந்த சொன்ன இடத்திற்கு வரவில்லை என்றால் அந்த ஆபாச புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிடப்படும் என மிரட்டல் வந்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக விடுதி நிர்வாகிகள் இருவரிடம் மாணவி புகார் அளித்தபோது, அவர்கள் மாணவியை உடையை மாற்றிவிட்டு குளிக்க சொல்லியுள்ளனர். மேலும், தனது தாயிடம் பேச மாணவியை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவ்விவகாரத்தை கண்டித்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், இவ்விவகாரத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அலட்சியமாக கையாண்டதாகவும், தடயத்தை அழிக்க முயற்சித்ததாகவும், சம்பவம் நடந்து 15 மணி நேரத்துக்கு பிறகே காவல் நிலையத்தில் விடுதி நிர்வாகம் புகார் அளித்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட விடுதி நிர்வாகிகள் மீதுன் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணாவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
