states

கேந்திரிய வித்யாலயா இடங்கள் ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் விவாதம்

புதுதில்லி, மார்ச் 21 - கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் மத்தியப் பள்ளிகளுக்கான இடங்களுக்காக ஏராளமான மனுக்கள் வருவதால் பத்து என்ற எண்ணிக்கையிலான இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை; ஒன்று ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; அல்லது பத்து என்ற எண்ணிக்கையை  ஐம்பதாக உயர்த்தலாம் என்றார்.  மேலும் அவர் கூறுகையில் பணியின் போது இடமாற்றம் செய்யப்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இந்தக் கொள்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். கேந்திரிய வித்யாலயா ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். திங்களன்று மக்களவையில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் ஒவ்வொரு  கல்வியாண்டிலும் பத்து மாணவர்களை ஒன்றியப் பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை முடிவுக்கு வர வேண்டுமா என்பது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் அரசு விவாதிக்கும் எனக் கூறிய தர்மேந்திர பிரதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவதில் சபைக்கு ஒருமித்த கருத்து இருந்தால், அந்தத் திசையில் அரசாங்கம் செயல்படும் எனவும் கூறினார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு  முதலில் இரண்டாக இருந்தது. பின்னர் ஐந்தாக உயர்த்தப்பட்டது. தற்போது அதன் எண்ணிக்கை பத்தாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஒன்றிய அரசுப் பணியாளர்கள் வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யப்படும் போது அவர்களது குழந்தைகளின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் அமைக்கப்பட்டதாக பிரதான் கூறினார்.  மத்தியப் பள்ளிகளை அமைக்க மாநில அரசுகள் தான் நிலம் வழங்க  வேண்டியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மத்திய பள்ளியாவது உள்ளது என்றும் கூறினார்.